புதிய சொகுசுக் கப்பல் முனையத்தை ஜூலை 15 முதல் 72,000 பேர் பயன்படுத்தினர்
மேம்படுத்தப்பட்ட புதிய சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையம் (ஹார்பர்ஃபிரண்ட்) கடந்த ஜூலை 15ல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து இதுவரை 720,000க்கும் அதிகமான பயணிகள் அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.
உச்ச நேரங்களில் நாளொன்றுக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்படும் 18,000 பயணிகளைத் தானியங்கி அமைப்புகள் கையாளுகின்றன.
பயணிகள் பதிவில் தொடங்கி, அவர்கள் படகுகளில் ஏறும்வரை, கப்பல், படகு நிறுவனங்களின் நேரலைத் தரவுகளை ஒருங்கிணைக்கும் புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, பயணிகளைச் சீராகக் கையாள உதவுகிறது.
“பயணப் போக்குகள் மாறிவரும் சூழலில், பயண அனுபவத்தை மேலும் எளிதாகவும் தடையற்றதாகவும் மாற்ற தொழில்நுட்பமும் புத்தாக்கமும் மிகவும் முக்கியம்,” என்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) முனையத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்து உரையாற்றிய போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறினார்.
“மேம்படுத்தப்பட்ட ஹார்பர்ஃபிரண்ட் முனையம் இந்தக் கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகத் தானியக்கத்தையும் அறிவார்ந்த இடப் பயன்பாட்டையும் இது ஒன்றிணைக்கிறது,” என்றார் அவர்.
கடப்பிதழ் தேவையில்லாத குடிநுழைவுப் பாதைகள், சுயமாகப் பதிவு செய்யும் இயந்திரங்கள் போன்ற வசதிகளை சொகுசுப் படகு முனையத்தின் தலைவர் லோ லிக் பெங் சுட்டிக்காட்டினார்.
“பயணங்களை எளிதாக்கும் வகையில் முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசதியான புறப்பாட்டு, வருகை நடைமுறையை ஏற்படுத்துவதற்காக, அனைத்து முகப்புகளும் தற்போது ஒரே தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கடப்பிதழ் தேவையில்லாத குடிநுழைவுப் பாதைகள் பயண நேரத்தைக் குறைக்கின்றன,” என்றார் அவர்.
முன்னர் இரு தளங்களில் செயல்பட்ட பாத்தாம் ஃபாஸ்ட் ஃபெர்ரி, ஹொரைசன், மெஜஸ்டிக், சிண்டோ இண்டோ ஃபால்கன் ஆகிய ஐந்து படகு நிறுவனங்களின் சேவைப் பணிமனைகளும் தற்போது ஒரே தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
புதிய முனையம் மிகவும் தூய்மையாகவும், வெளிச்சமாகவும், விரைவாகச் செயல்படக் கூடியதாகவும் இருப்பதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
எனினும், ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரம் சற்று அதிகமாக இருப்பதாகக் சிலர் கருத்து தெரிவித்தனர். சுயமாகப் பதிவு செய்யும் வசதிகளும், அனைத்துச் சேவைப் பணிமனைகளும் ஒரே தளத்தில் அமைந்திருப்பது பயணத்தை மேலும் எளிதாக்கியுள்ளதாகப் பயணிகள் கூறினர்.