📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 22, 2026 06:04 PM

அங் மோ கியோ மாடி வீட்டில் தீ விபத்து

அங் மோ கியோ மாடி வீட்டில் தீ விபத்து

அங் மோ கியோ வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) காலை ஏற்பட்ட தீ விபத்தில் கறும்புகையைச் சுவாசித்த இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மூன்றாவது நபரான தீயணைப்பு வீரர் ஒருவர் வெப்பக் களைப்பால் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங் மோ கியோ அவென்யூ 4 புளோக் 254 முகவரியில் உள்ள ஏழாம் மாடி வீட்டில் தீ ஏற்பட்டது குறித்து அன்றைய தினம் காலை 10.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

வீட்டின் வரவேற்பு அறையில் உள்ள பொருள்களில் முதலில் தீப்பிடித்தது. அவ்வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்ட இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று எஸ்சிடிஎஃப் அதன் பதிவில் தெரிவித்தது.

பாதுகாப்பு கருதி தீப்பிடித்த மாடிவீட்டுக் கட்டடத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 குடியிருப்பாளர்களை அதிகாரிகள் மாற்று இடங்களுக்குச் செல்லும்படி வெளியேற்றினர்.

தண்ணீர் குழாயைக் கொண்டு நீரைப் பீய்ச்சியடித்துத் தீ அணைக்கப்பட்டது. தீ ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

கெபுன் பாரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்ரி குவெக் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்களை வீவக ஏற்பாடு செய்யும் என்று அவரது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

பாதிக்கப்பட்டோருக்கு உடனடி உதவி வழங்கிய எஸ்சிடிஎஃப், காவல்துறை அதிகாரிகளையும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உட்பட அங் மோ கியோ நகரமன்றச் செயற்குழுவையும் அவர் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டார்.