📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 16, 2026 08:03 PM

சிங்கப்பூர் சுற்றுலாப் பயணி மீது அமில வீச்சு: ஹாங்காங் இளைஞர் ஒப்புக்கொண்டார்

சிங்கப்பூர் சுற்றுலாப் பயணி மீது அமில வீச்சு: ஹாங்காங் இளைஞர் ஒப்புக்கொண்டார்

சிங்கப்பூர் பெண் ஒருவர் மீது சென்ற ஆண்டு அரிக்கும் திரவத்தை ஊற்றியதை ஹாங்காங்கைச் சேர்ந்த இளைஞர் ஒப்புக்கொண்டதாக ஹாங்காங் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலில் அப்பெண்ணிற்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன.

தற்போது 19 வயதாகும் ஏன்சன் கியூ, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரிக்கும் திரவத்தைத் தெளித்த குற்றச்சாட்டை அக்டோபர் 15ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

நீதிபதி ஆண்ட்ரூ சான் ஹிங்-வாய், அவருக்கான தண்டனையின் விவரங்கள் இம்மாதம் 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி, வான் சாய் பகுதியில் 36 வயது ஜியாங் வென் என்ற சுற்றுலாப் பயணி காரில் ஏறமுயன்றபோது, கியூ அவரை மறைந்திருந்து தாக்கியதாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ கூறியது.

முகத்திலும் கால்களிலும் கடுமையான எரிச்சலை உணர்ந்த ஜியாங் வேதனையில் அலறித் துடித்து கீழே விழுந்தார். கருப்பு உடை அணிந்து முகமூடி அணிந்திருந்த கியூ, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார்.

கார் ஓட்டுநர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்ததாக ‘எச்கே01’ ஊடகம் தெரிவித்தது.

சம்பவம் நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு, கியூ காவல் நிலையத்தில் சரணடைந்தார்; ஆனால் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த அவர், தாக்குதலுக்கான காரணத்தையும் கூறவில்லை.

தாக்குதலை நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன்பே கியூ, அப்பகுதியை நோட்டமிட்டது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வான் சாய் பகுதியில் உள்ள சந்தையொன்றில் திரவத்தின் தடயங்கள் கொண்ட போத்தலையும் காவல்துறையினர் கண்டெடுத்ததாகக் கூறப்பட்டது.

அந்தத் திரவத்தில் குறைந்தபட்சம் 90 விழுக்காடு கந்தக அமிலம் இருந்ததை அரசாங்க வேதியியலாளரின் அறிக்கை உறுதிப்படுத்தியது. திரவம், தீவிரத் தோல் அழற்சியையும் பார்வையில் நிரந்தரப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜியாங்கின் பாதங்கள், முகம் உட்பட உடலின் 10 விழுக்காட்டுப் பகுதியில் ரசாயனத் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.

அவருக்கு அறுவை சிகிச்சையும் பல தோல் மாற்று சிகிச்சைகளும் செய்யப்பட்டன; மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் இருந்த பிறகு, சிகிச்சையைத் தொடர அவர் சிங்கப்பூர் திரும்பினார்.