அக்டோபர் பிற்பாதியில் மழை, வெப்பம்
அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேவேளையில் வெப்பமான வானிலை நிலவும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்துள்ளது.
தீவின் சில பகுதிகளில் குறுகிய பொழுது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப்பொழிவு சராசரியைவிடக் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பகல்நேர உச்ச வெப்பநிலை 33 முதல் 35 செல்சியஸ் வரையிலும், சில நாள்களில் 35 செல்சியசுக்கு அதிகமாகவும் பதிவாகக்கூடும். இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை 27 செல்சியசைவிட அதிகமாக இருக்கும்.
அக்டோபர் முதல் பாதியில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலையே நீடித்தது. அக்டோபர் 6ஆம் தேதி அன்று புலாவ் உபினில் ஆக அதிகபட்சமாக 34.9 செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
அக்டோபர் 1ஆம் தேதி நன்யாங் அவென்யூ பகுதியில் அதிகபட்சமாக 60.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதேவேளையில் பொங்கோல் பகுதியில் சராசரியை விட 94 விழுக்காடு குறைவாகவே மழை பதிவானது.
இதற்கிடையே தீவு முழுவதும் புகைமூட்டத்தின் தாக்கம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மத்திய பகுதியில் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு இந்த ஆண்டின் புதிய உச்சமாக 229ஐ எட்டியது. இது ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையைக் குறிக்கிறது.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடர்ந்து 12 நாள்களாகச் சிங்கப்பூரில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. இது 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான புகைமூட்ட நிலைக்குப் பிறகு பதிவான மிக நீண்ட காலகட்டமாகும்.