📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 23, 2026 09:03 AM

அடுத்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இடத்தை மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்: மத்திய அரசு

அடுத்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இடத்தை மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்: மத்திய அரசு

ஏக்தா நகர் (குஜராத்): அடுத்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கான சுற்றுலாத் தலத்தை மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள குஜராத்தின் ஏக்தா நகரில் இன்று நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “சர்தார் வல்லபாய் படேலின் உலகின் உயரமான சிலை அமைந்துள்ள ஏக்தா நகர், உலகளவில் அங்கீகாரம் பெற்ற, ஈர்க்கக்கூடிய ஒரு சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. நாட்டின் குடியரசுத் தலைவர், நாடு முழுவதிலுமிருந்து இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் இந்தப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்திற்கு வருகைதரும் போது, அந்த இடம் குறித்து மேலும் அறிந்து கொள்ளவும், அதை நேரில் பார்க்கவும் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

தேசிய அளவிலான நிகழ்வுகளை வழக்கமாக நடைபெறும் இடங்களில் அல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவற்றை நடத்த வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கு இணங்க, தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இந்த ஆண்டு ஏக்தா நகரில் நடைபெறுகிறது.

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை அரங்குகளில் மட்டுமே நடத்தாமல், சுற்றுலாத் துறையின் மூலம் அதை மேம்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இம்முயற்சியின் நோக்கம்.

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த சிறந்த சுற்றுலாத் தலங்களை அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைக்க வேண்டும். இந்தப் பரிந்துரைகளில், அந்தச் சுற்றுலாத் தலங்களின் சிறந்த வசதிகள், முழுமேம்பாட்டிற்கான திட்டம் ஆகியவை குறித்து இடம்பெற வேண்டும். அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலத்தின் சுற்றுலாத் தலத்தில் அடுத்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறும்” என்று தெரிவித்தார்.