விவசாயிகளிடம் பயிர்க்கடன் வசூலை நிறுத்த வங்கிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு
சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் எஸ்.சுப்பிரமணியன், மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம் 2026-ன் கீழ் பகுதி தள்ளுபடி தொகை பெற்ற விவசாயிகள், எஞ்சிய தொகையை முழுமையாக செலுத்தி கடனை முடிக்காமல் தவணை தவறிய நிலையில் இருந்தால், அவர்களிடம் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
தற்போது இதுசார்ந்து கூட்டுறவுச் சங்கங்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி பயிர்க் கடன் நிலுவை தொடர்பான அனைத்து வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.
பயிர்க்கடனை முழுமையாக நிலுவை இல்லாமல் திருப்பிச் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தெரிவித்து, அவை முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், இந்த நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.