📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 17, 2026 06:02 PM

அரிசி, பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரிசி, பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாடு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கடுமையாக உயர்ந்துள்ளன. பொன்னி உள்ளிட்ட சில அரிசி ரகங்களின் விலை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.90 வரை விற்பனையாகின்றன. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.48 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூ.70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலப்பு என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

தற்போது தீபாவளி போன்ற விழா காலங்கள் நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில் அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். சர்க்கரை விலை உயர்வால் ஹோட்டல்களில் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை ரூ.15 வரை உயர்ந்தது. காபி விலை ரூ.20 வரை உயர்ந்தது. தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் பதுக்கல்கள், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. பொன்னி அரிசி ரூ.90-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இட்லி அரிசி ரூ.35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன. உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120 லிருந்து ரூ.150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80 லிருந்து ரூ.100 ஆகவும், தனியா ரூ.160 லிருந்து ரூ.250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.