துறைமுக வேலைகள்: முத்தரப்பு உறவுகளைப் புதுப்பிக்க லீ வலியுறுத்தல்
தொழில்நுட்ப மாற்றங்கள், உலகளாவிய வர்த்தக முறைகளில் ஏற்படும் மாற்றங்களால் துறைமுக ஊழியர்கள் பின்தங்கிவிடாமல் பாதுகாப்பதற்கு, தொழிற்சங்கங்கள், துறைமுக நிர்வாகம், அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையே வலுவான, தொலைநோக்குப் பார்வையுடனான கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.
சனிக்கிழமை (அக்டோபர் 17) நடைபெற்ற சிங்கப்பூர் துறைமுக ஊழியர் சங்கத்தின் 80வது ஆண்டு விழாவில் உரையாற்றிய மூத்த அமைச்சர் லீ சியன் லூங், கடந்த காலத்தைப் போலவே, ஊழியர்கள் தொடர்ந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள உதவ வேண்டும் என்றும் இதற்காகத் தொழிற்சங்கங்களும் சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் (பிஎஸ்ஏ) தலைவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திறன்களை மேம்படுத்திக்கொள்வதன் மூலமே, ஊழியர்களால் அதிக மதிப்புடைய, தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நீண்டகால வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.
“கடந்த கால மாற்றங்களின் அலைகளைப் போலவே, இந்த மாற்றங்களையும் ஊழியர்கள் தனியாக எதிர்கொள்ள நாம் விட்டுவிடக்கூடாது. முன்னெப்போதையும் விட, பிஎஸ்ஏயின் வெற்றியையும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய, திறமையான, புதுமையான பிஎஸ்ஏ நிர்வாகக் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றும், வலுவான, நன்கு வழிநடத்தப்படும் ஒரு சிங்கப்பூர் துறைமுக ஊழியர் சங்கம் நமக்குத் தேவைப்படும்,” என்று எஸ்.எம். லீ கூறினார்.
“வலுவான சிங்கப்பூர் மையத்துடன், ஒழுக்கமான, திறமையான ஊழியரணியை உருவாக்குவதற்கும், அவர்களின் உழைப்பின் பலன்களில் நியாயமான பங்கை அவர்களுக்குப் பெற்றுத் தருவதற்கும் இதுவே வழி,” என்றார் அவர்.
தொழில்நுட்பம் முன்னேறியதால், கடந்த காலத்தில் துறைமுகத் தொழில் பல சுற்றுகளில் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. கைமுறையாக சரக்குகளைக் கையாளுவது, துறைமுக பாரந்தூக்கியை இயக்குபவர்கள் கட்டுப்படுத்தும் முறையிலிருந்து, தொலைவிலிருந்து இயக்கப்படும் தானியங்கி வழிகாட்டு வாகனங்கள் வரை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
“ஒவ்வொரு முறையும் வேலைகள் மாறும்போதும், புதிய பணிகளை ஏற்க பிஎஸ்ஏ ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்தது, அதே நேரத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் ஊழியர்களை நெகிழ்வான மனப்பான்மையைக் கடைப்பிடித்து தங்களை மேம்படுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்தினர்,” என்று திரு லீ கூறினார்.
த ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில், தொழிற்சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், நிர்வாகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மேலும், தொழில்துறை, தொழிற்சங்கம், முத்தரப்பு ஒத்துழைப்புக்கு அவர் ஆற்றிய நீண்டகால ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அங்கு அவருக்கு சிங்கப்பூர் துறைமுக ஊழியர் சங்க கௌரவ உறுப்பினர் மரியாதையும் வழங்கப்பட்டது.