📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 17, 2026 07:07 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

புதுடெல்லி,

தீபாவளியை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு போனஸ் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு (அதாவது குரூப் சி மற்றும் அதிகாரி அல்லாத குரூப் பி ஊழியர்களுக்கு) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை இந்த போனஸ் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

எவ்வளவு கிடைக்கும்?

2025-2026 நிதியாண்டுக்காக, மாதம் ரூ.7 ஆயிரம் ஊதிய உச்சவரம்பை கணக்காக கொண்டு 30 நாட்கள் என்ற கணக்கீட்டில் இந்த போனஸ் வழங்கப்படுகிறது. இது உற்பத்தி சாரா போனஸ் ஆகும். மேற்கண்ட கணக்கீட்டின்படி அதிகபட்சமாக ரூ.6,908 போனசாக கிடைக்கும்.

யாருக்கு பொருந்தும்?

மத்திய துணை ராணுவப்படைகள் மற்றும் ஆயுதப்படைகளின் தகுதியுள்ள ஊழியர்களுக்கும் இந்த போனஸ் அனுமதிக்கப்படுகிறது. அது போல மத்திய அரசின் ஊதிய முறையைப் பின்பற்றும் மற்றும் வேறு எந்த போனஸ் அல்லது கருணைத்தொகை திட்டத்தின் கீழும் வராத யூனியன் பிரதேச நிர்வாக ஊழியர்களுக்கும் இந்த உத்தரவுகள் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

தகுதியுள்ள ஊழியர்களுக்கு, ஆண்டில் 6 மாதங்கள் முதல் முழு ஆண்டு வரையிலான தொடர்ச்சியான சேவைக் காலத்துக்கு விகிதாசார அடிப்படையில் பணம் வழங்கப்படும். தற்காலிக அல்லது தேவைக்கேற்ப நியமிக்கப்படும் பணியாளர்களும் இதில் பலன் பெறுவார்கள்.

குறைந்தது 6 மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி பணியில் இருந்திருந்தால் போதுமானது. அவர்கள் போனஸ் பெற தகுதி பெறுவார்கள். இதன்மூலம் நாடு முழுவதும் 30 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டில் 90 ஆயிரம் பேருக்கு இந்த போனஸ் கிடைக்கும்.

நிபந்தனைகள்

போனசை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. 31-3-2026 அன்று பணியில் இருந்த மற்றும் 2025-2026-ம் ஆண்டில் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ச்சியான சேவையை வழங்கிய ஊழியர்கள் மட்டுமே இந்த உத்தரவுகளின் கீழ் பணம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.