அமெரிக்க தூதர்கள் வருகை எதிரொலி உக்ரைனுடன் 72 மணி நேரம் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
அமெரிக்க தூதர்கள் வருகை எதிரொலி உக்ரைனுடன் 72 மணி நேரம் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து வருகின்றது. அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முடங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று தாக்குதலை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களில் தீவிரம் காட்டி வருகின்றன.
கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்கா ஈரானுடனான போரில் கவனம் செலுத்தியதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முடங்கியது. இந்நிலையில் ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கி உள்ளது. அமெரிக்க தூதர்கள் அதிபர் டிரம்பின் மருமகனான குஷ்னர் மற்றும் விட்கோப் ஆகியோர் நேற்று ரஷ்யா வந்தனர். மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷ்ய தூதர் கிரில் டிமிட்ரியேவ் அவர்களை வரவேற்றார்.
அமெரிக்க தூதர்கள் வருகை தந்துள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது 72 மணி நேரத்துக்கு எந்த தாக்குதலும் நடத்தப்படக்கூடாது என்று அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். 2 விமான நிலையங்கள் மீது தாக்குதல்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது சமூக ஊடக பதிவில், ‘‘கீவ் மற்றும் போரிஸ்பில் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் மீது ரஷ்யா இரவு நேரத்தில் தாக்குதல்களை நடத்தியது.எங்கள் தரப்பில் இருந்து தூதரக நடவடிக்கைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. இனிமேலும் வராது” என்று குறிப்பிட்டுள்ளார்.