📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 17, 2026 06:36 PM

ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்.. அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி.. தாய்லாந்திடம் போராடி வெற்றி

ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்.. அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி.. தாய்லாந்திடம் போராடி வெற்றி

ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்.. அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி.. தாய்லாந்திடம் போராடி வெற்றி

நிஷின்: ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் கிரிக்கெட் காலிறுதி ஆட்டத்தில், தாய்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு போட்டியில், மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், சர்வதேச தரவரிசையில் முன்னிலையில் இருந்த வங்கதேச அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ஜப்பான் நிஷின் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தாய்லாந்து வீராங்கனைகள் கடுமையான சவாலை அளித்தனர். மழை காரணமாக போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் தொடக்க வீராங்கனை களமிறங்கிய ஆயிஷா ஜாபர், 37 ரன்கள் எடுத்திருந்தபோது 4.3 ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த குல் பெரோசா, ஆலியா ரியாஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் பாத்திமா சனா மற்றும் ஏமன் பாத்திமா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தது. குறிப்பாக ஒன்னிச்சா கம்சோம்ஃபு வீசிய 8-வது ஓவரில், பாத்திமா சனா மற்றும் ஏமன் பாத்திமா ஆகியோர் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி 25 ரன்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது 8.1 ஓவரில் வீழ்ந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தூபா ஹசன், சுனிதா சதுரங்ரத்தினா வீசிய 10-வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை எளிதாக்கினார். எனினும் அதே ஓவரில் அவர் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 88 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், உம்-இ-ஹானி மற்றும் ஈமான் நசீர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி 10.4 ஓவர்களில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே குரூப் பிரிவின் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் சீனா மோதவிருந்தன. ஆனால் மைதானம் ஈரமாக இருந்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 தரவரிசையில் வங்கதேசம் 10-வது இடத்திலும், சீனா 36-வது இடத்திலும் உள்ள நிலையில், தரவரிசை அடிப்படையில் வங்கதேச அணி விளையாடாமலேயே அரையிறுதிக்கு முன்னேறியது.