கடும் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் மாநாட்டில் ஐநா திட்டம்
உலகளவில் மிக வேகமாகவும் தீவிரமாகவும் அச்சுறுத்தி வரும் கடும் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான புதிய உலகளாவிய உத்தியை உருவாக்குவதில் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) வியாழக்கிழமை (செப்டம்பர் 17)அறிவித்துள்ளது.
‘உலகளாவிய வெப்ப மீள்திறன் வழிகாட்டி’ (Global Heat Resilience Roadmap) என்ற அந்தத் திட்டம், வெப்ப அலையின்போது நீர், உணவுப் பாதுகாப்பு மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள், பணியிடங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்புக்கான நடைமுறை முறைகளை வகுக்கும் என்று பார்க்ராயல் ஹோட்டலில் நடைபெற்ற நான்கு நாள் மாநாட்டில் ஐநா அறிவித்தது.
குளிர்சாதனப் பயன்பாட்டினால் ஏற்படும் கரிம உமிழ்வைக் குறைக்கும் வழிகளைக் கண்டறிய, 60க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘உலகளாவிய குளிர்விப்பு வாக்குறுதி பேரவையை’ ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஒருங்கிணைத்தது.
குளிரூட்டி பயன்பாட்டை மட்டுமே அதிகம் நம்பியிருக்காமல், வீடுகளுக்குள் இயற்கைக் காற்றோட்டத்தை அதிகப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற இயற்கையான குளிர்விப்பு முறைகளை மேம்படுத்துவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
கடுமையான வெப்பம் பொதுச் சுகாதாரத்தைப் பாதிப்பதுடன், நோய் ஆபத்துகளை அதிகரித்து வணிகச் செயல்பாடுகளையும் முடக்கும். இதை எந்தவொரு தனி அமைப்போ அல்லது துறையோ தனியாக எதிர்கொள்ள முடியாது என்று மாநாட்டில் பேசிய சுற்றுப்புற, நீடித்தநிலைத்தன்மை அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.
வெப்ப மீள்திறன், நிலையான குளிர்விப்புக்கான முன்னோடி நடவடிக்கைகளுக்காகச் சிங்கப்பூருக்கு ஐநாவின் ‘கூல் லீடர்ஸ்’ விருது வழங்கப்பட்டது.
“இந்த விருதை மிகத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இத்துறையில் சவால்கள் நிறைந்த நீண்ட பயணத்தின் தொடக்கத்திலேயே இருக்கிறோம்,” என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.
கடும் வெப்பநிலையைக் கையாள்வதற்காகச் சிங்கப்பூர் அண்மையில் ‘வெப்ப மீள்திறன் கொள்கை அலுவலகத்தை’ அமைத்துள்ளதுடன், வெப்ப அலையின்போது பொதுமக்களுக்காக 300க்கும் மேற்பட்ட குளிரூட்டி மையங்களைத் திறக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.