ஆசிரியர்கள் ருசித்துத் தரம் சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு காலை உணவு
ஆசிரியர்கள் ருசித்துத் தரம் சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு காலை உணவு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
உணவு வழங்கும் நடைமுறைகளை தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் தினசரி சுழற்சி முறையில் நேரில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Published : September 25, 2026 at 1:34 PM IST
சென்னை: பள்ளிகளில் காலை உணவை ஆசிரியர்கள் முதலில் ருசித்துத் தரம் பார்த்த பிறகே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் வயிற்று பசியின்றி கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தும் வகையிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மாநில முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது.
இந்த சூழலில், திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று (செப்.24) காலை உணவு சாப்பிட்ட 40 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மாணவர்கள் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவில் பல்லி இருந்ததாகவும், இதற்கு சமையலரின் கவனக்குறைவுவே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கவிதா உறுதியளித்தார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவ - மாணவியர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் நரேஷ் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், சமையல் தரம், தூய்மை மற்றும் மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலைப் பிறப்பித்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் அசுத்தங்கள் கலப்பது அல்லது சுகாதாரக் குறைபாடுகளால் உணவு நஞ்சாதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தீவிரமாகத் தடுப்பதே இந்த உத்தரவின் பின்னணியாகும்.
இதற்காக சமையலறைகளைத் தூசி, நூலாம்படை இன்றி சுத்தமாக வைப்பது, பயன்பாட்டிற்கு முன்பும் பின்பும் பாத்திரங்களை முறையாகக் கழுவுவது மற்றும் சமைத்த உணவை எப்போதும் பாதுகாப்பாக மூடி வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உணவின் தரம் குறித்து எந்த புகாருக்கும் இடம் தராத வகையில், மாணவர்களுக்குப் பரிமாறுவதற்கு முன்னரே ஆசிரியர்கள் அந்த உணவை ருசித்து அதன் தரம் மற்றும் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வழங்க வேண்டும் என அரசு நேரடியாக பொறுப்பை நிர்ணயித்துள்ளது.