டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களா நீங்கள்? பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்
டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களா நீங்கள்? பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்
காய்ச்சல் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Published : September 23, 2026 at 4:50 PM IST
சென்னை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 21-ஆம் தேதி 71 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 348 என இருந்தது.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 22) 301 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு்ளளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 649 என உயர்ந்துள்ளது. இதுவரை டெங்கு பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி துறை மூலம் களப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், நாளுக்கு நாள் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில், காய்ச்சல் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காய்ச்சலில் பாதிக்கும் குழந்தைகள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மற்றவர்களுக்கும், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோய் பரவலின் தன்மை குறையும் என்பதால் முகக்கவசம் அணிவது நல்லது என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் மூலம், மற்றவர்களுக்கு இந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதால் குறிப்பிட்ட இந்த நபர்கள் முகக்கவசம் அணிவது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும், சுயமாக மாத்திரை எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.