வடபழனி
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், முதல் ரயில் சேவை வடபழனி - பூந்தமல்லி இடையே தொடங்கிய நிலையில், முதல் நாளில் வெறும் 5 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
இரண்டு நாட்களில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வடபழனி - பூந்தமல்லி (15 கி.மீ.) வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் ஆகியோர் இணைந்து நேற்று முன்தினம் காலை தொடங்கி வைத்தனர்.
இதன்பிறகு, இத்தடத்தில் பொதுமக்களுக்கான மெட்ரோ ரயில் சேவை மாலையில் தொடங்கியது. இரு மார்க்கத்திலும் பயணிகள் மிகுந்த உற்காகத்துடன் மெட்ரோ ரயில்களில் பயணித்தனர்.
இந்நிலையில், இத்தடத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணி நேரத்தில் 25,474 பேர் பயணித்துள்ளனர்.
2-வது நாளான நேற்றும் காலை முதல் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக காலை, மாலை நெரிசல் மிகுந்த நேரத்தில் கூட்டம் அலைமோதியது.
நேற்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
இந்த தடத்தில் தற்போது வரை 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் மக்களின் பயண நேரம் குறையும். போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அவதியும் இனி இருக்காது.
கோயம்பேடு-வர்த்தக மையம் தடம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சோழிங்நல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மெட்ரோ ரயில் நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.
இத்தடத்தில் மொத்தம் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. அடுத்த 6 மாதங்களில் இத்தடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.