📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 13, 2026 04:04 PM

சுபாங்-சிலேத்தார் விமானச் சேவை ரத்து நீட்டிப்பு

சுபாங்-சிலேத்தார் விமானச் சேவை ரத்து நீட்டிப்பு

மலேசியாவின் ஃபயர்ஃபிளை நிறுவனம், சுபாங்கிற்கும் சிலேத்தாருக்கும் இடைப்பட்ட விமானச் சேவைகளை மீண்டும் ரத்து செய்துள்ளது.

இந்த முறை இம்மாதம் 14ஆம் தேதிவரை ஃபயர்ஃபிளை விமானங்கள் சேவை வழங்காது.

இதற்குமுன், புகைமூட்டம் காரணமாக, சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ‌‌‌ஷா விமான நிலையத்துக்கும் சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்துக்கும் இடைப்பட்ட சேவைகளை இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிவரை ஃபயர்ஃபிளை ரத்து செய்தது.

அதையடுத்து 13ஆம் தேதிவரை சேவைகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தது.

விமான ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் கோலாம்பூரிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் கூடுமானவரை மாற்றிவிடப்படுவர் என்று ஃபயர்ஃபிளை அதன் இணையத்தளத்தில் அறிவித்தது.

மாற்று விமானங்களில் பயணம் செய்ய விரும்பாதோர் பயணக் கட்டணங்களை முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில், சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையமும் சாங்கி விமான நிலையமும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

சாங்கியிலும் சிலேத்தாரிலும் உள்ள இரண்டு விமான நிலையங்களும் தொடர்ந்து செயல்படுவதாக அது குறிப்பிட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மேலும், புகைமூட்டத்தால் குறைவான தூரம் மட்டுமே பார்க்க முடிவதால் இம்மாதம் 5ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து 16 விமானங்கள் திசை மாற்றப்பட்டதாக அறிக்கை சொன்னது.

“தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஒருசில விமான நிறுவனங்கள் சேவையை மாற்றின. வேறு சில நிறுவனங்கள் அவற்றை ரத்து செய்தன,” என்று கூட்டறிக்கை சுட்டியது.

விமான ஊழியர்களையும் பயணிகளையும் பாதுகாக்க நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதாகக் குறிப்பிட்ட சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையமும் சாங்கி விமான நிலையமும் தேவை ஏற்பட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றன.