வியட்னாம்
ஹனோய்: நார்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளைக் கொண்ட தடையற்ற வணிகத்துக்கான ஐரோப்பியச் சங்கத்துடன் (இஎஃப்டிஏ) வியட்னாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஹனோயில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) வியட்னாமின் உயர் தலைவர் தோ லாம்பின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரு தரப்பும் தங்கள் வணிகச் சந்தைகளைப் பன்முகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த வணிகப் பேச்சுவார்த்தை, சில காலம் தாமதமான நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது.
ஒப்பந்தம் நடப்புக்கு வரும்போது, நார்வேயிலிருந்து வியட்னாமுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் பாதியளவுக்கு வரி இருக்காது. அத்துடன், அடுத்த ஏழு ஆண்டுகளில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமான பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
வியட்னாம், ஈஎஃப்டிஏ சந்தைக்கு முக்கியமாகக் கடல் உணவு, காலணி, ஜவுளி, இயந்திரங்கள், மின்னணுச் சாதனங்களை ஏற்றுமதி செய்கிறது. அதேவேளையில், தொழில்முறை இயந்திரங்கள், ரசாயனங்கள், மருந்துகள், உதிரிப்பாகங்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இரு தரப்பிற்கும் இடையிலான இருதரப்பு வணிகம் ஆண்டிற்குச் சராசரியாக $2 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாக வியட்னாம் தெரிவித்தது. ஈஎஃப்டிஏ அமைப்பின் தரவுகளின்படி கடந்த ஆண்டு இது 4.8 பில்லியன் யூரோவை எட்டியுள்ளது.
பொருள், சேவை, அறிவுசார் சொத்துரிமை,நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளை உள்ளடக்கிய அந்த ஒப்பந்தம், உலகளாவிய வணிகச் சவால்களுக்கு மத்தியில் வியட்னாமின் வணிகச் சந்தையை மேலும் விரிவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.