📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 18, 2026 09:03 PM

நாகையில் தவெக மாஜி வீட்டில் சிக்கிய போதை பொருள் மதிப்பு ரூ.100 கோடி; மத்திய நிதி அமைச்சகம் ஷாக் தகவல்

நாகையில் தவெக மாஜி வீட்டில் சிக்கிய போதை பொருள் மதிப்பு ரூ.100 கோடி; மத்திய நிதி அமைச்சகம் ஷாக் தகவல்

நாகையில் சிக்கிய மெத்தம்பெட்டமைன் போதை பொருளின் மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமானது என்று மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாகையில், அண்மையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருளை வருவாய் புலனாய்வு இயக்குரக அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வழக்கில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், வக்கீலுமான பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தவெகவின் முக்கிய நிர்வாகி பூபாலன் வீட்டிலேயே போதை பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளானதால், அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கலாம் என்று யூகங்களும், மதிப்பீடுகளும் கிளம்பின.

அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமானது என்று மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை;

நாகையில் கடலோர கிராமம் ஒன்றில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ரகசிய தகவலையடுத்து, அக்டோபர் 16 மற்றும் 17 தேதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், ரகசிய சோதனை நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

சோதனையில் 6 பெரிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 27 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. வெள்ளித்தகடுகளால் ஒவ்வொரு பொட்டலமும் சுற்றப்பட்டு இருந்தது. அதன் எடை 5 கிலோ. பொட்டலத்தில் அதிக வீரியம் கொண்ட மெத்தம்பெட்டமைன் என்று சந்தேகிக்கப்படும் வெள்ளை நிற பொருள் இருந்தது.

மொத்தம் 137 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதை பொருளை நாகை கடலோர கிராம பகுதியில் இருந்து படகுகள் மூலம் கொண்டு சென்று நடுக்கடலில் வேறு ஒரு படகுக்கு மாற்றி இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதில் சந்தேகிக்கப்படும் நபருக்குச் சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சம் ரொக்கம் சிக்கியது. போதை பொருள் விற்பனையில் கிடைத்த பணம் என சந்தேகிக்கப்படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் தொடர்புடையதாக 4 பேர் போதை பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றக் காவலில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் வழியாக, இலங்கைக்கு போதை பொருட்களை கடத்துவதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து, பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சட்டவிரோத கடத்தல் வலையமைப்பை கண்டுபிடித்து, வெற்றிக்கரமாக முறியடித்துள்ளோம். சட்டவிரோத கடத்தலுக்கான வழித்தடமாக இந்தியாவின் கடற்கரையை பயன்படுத்துவதை தடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளே இது.

இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.