📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 18, 2026 03:03 PM

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு, சம்பா சாகுபடி தயக்கம்

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு, சம்பா சாகுபடி தயக்கம்

தஞ்சாவூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருவதன் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்க விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

நடப்பாண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால், வழக்கமான ஜூன் 12ஆம் தேதிக்குப் பதிலாக, தாமதமாகவே செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை இலக்கு நிர்ணயித்தது.

ஆனால், தண்ணீர் திறக்கப்பட்டு 45 நாள்களுக்கு மேலாகியும் பல்வேறு வாய்க்கால்களுக்கும் குறிப்பாகக் கடைமடைப் பகுதிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் சென்று சேரவில்லை.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.02 அடியாகக் குறைந்து, நீர் இருப்பு 22.52 டிஎம்சி ஆகச் சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 640 கன அடி மட்டுமே நீர்வரத்து உள்ள நிலையில், பாசனத்திற்காக 8,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளால் நாற்றங்கால்கூட அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆழ்குழாயக் கிணற்று வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே தற்போது சாகுபடிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

வழக்கமாகச் செய்யப்படும் 10 லட்சம் ஏக்கரில் சுமார் 4 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி பரப்பளவு குறையக்கூடும் என்றும், இதனால் 8 முதல் 10 லட்சம் டன் வரை நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சம்பா சாகுபடிக்கு பிப்ரவரி வரை சுமார் 75 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் என வேளாண் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

எனவே, தமிழக அரசு உடனடியாக ‘சம்பா தொகுப்புத் திட்டம்’ அறிவித்து, டீசல் மோட்டார் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.