📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 23, 2026 02:04 PM

விமானத்துறை சவால்கள்: ஆசிய பசிபிக் வழிநடத்துகிறது

விமானத்துறை சவால்கள்: ஆசிய பசிபிக் வழிநடத்துகிறது

உலகளாவிய ஆகாயப் போக்குவரத்து வளர்ச்சியில் ஆசிய பசிபிக் வட்டாரம்தான் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் மற்ற இடங்களிலிருந்து வரும் தீர்வுகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக விமானத்துறையின் எதிர்காலத்தை அவ்வட்டாரமே வரைவது முக்கியம் என்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை புதன்கிழமை (செப்டம்பர் 23) கூறினார்.

1990களின் தொடக்கத்தில் ஹாங்காங், தென்கொரியா போன்றவற்றில் விமான நிலையளங்களை இடம் மாற்றுவதற்கான திட்டங்கள் வரையப்பட்டதற்கு, வருங்கால வளர்ச்சியைக் குறிவைத்து இடம்பெற்ற முற்போக்குச் சிந்தனையும் தொடர் முதலீடுகளுமே காரணங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் அந்தந்த நகரங்களையும் அவற்றில் உள்ள மக்களின் வாழ்க்கையையும் உருமாற்றின.

ஆசியப் பொருளியல்களுக்கு இடையே மேலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகள் ஏற்பட்டு அவை உலகுடன் ஒன்றிணையும்போது சாங்கி, செக் லாப் கொக், இஞ்சியோன் போன்ற விமான நிலையங்கள் சுற்றுலா, வர்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றுக்கான சக்திவாய்ந்த தளங்களாக மாறின என்றும் திரு முரளி தெரிவித்தார்.

“இப்போது நினைத்துப் பார்க்கும்போது அந்த முடிவுகளுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் ஒருங்கிணைக்கும் தொடர்புகள் (connectivity) எதிர்கால உலகை உருவாக்கும் என்ற மனவுறுதி, முற்போக்குச் சிந்தனை, தொடர் முதலீடுகள் ஆகியவை தேவைப்பட்டது,” என்றும் அவர் விவரித்தார்.

வருங்காலத்துக்கான வளர்ச்சி

அந்தந்த காலத்துக்கான ஆகாயப் போக்குவரத்துக்காக மட்டுமின்றி வருங்கால வளர்ச்சிக்காகவும்தான் விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிவிதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்முறையாக நடைபெறும் ஆசிய பயணிகள் முனைய மாநாட்டில் (Passenger Terminal Expo Asia) திரு முரளி பேசினார். அந்நிகழ்ச்சி மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெறுகிறது.

1980களில் ஒரே முனையத்தைக் கொண்டிருந்த சாங்கி விமான நிலையம் எவ்வாறு உலகம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 170 நகரங்களை இணைக்கும் நான்கு முனையங்களைக் கொண்டுள்ள முக்கிய ஆகாயத்துறைத் தளமாக உருவெடுத்தது என்பது பற்றியும் திரு முருளி தமது உரையில் விளக்கினார்.

2030களின் நடுப்பகுதியில் சாங்கியின் ஐந்தாம் முனையம் திறக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவு இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு ஆண்டுதோறும் கையாளப்படும் பயணிகள் எண்ணிக்கை 90 மில்லியனிலிருந்து 140 மில்லியனுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.