“உலகக்கோப்பையில் ஆடணும்னா ஹர்திக் பாண்டியா உடனே ஜாகீர் கான், பாலாஜியிடம் பாடம் கற்கணும்”
“உலகக்கோப்பையில் ஆடணும்னா ஹர்திக் பாண்டியா உடனே ஜாகீர் கான், பாலாஜியிடம் பாடம் கற்கணும்” - ராம்ஜி
மும்பை: இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயங்களால் தொடர்ச்சியாக முடங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது உடற்தகுதியை மீட்டெடுக்க முன்னாள் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜியிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராம்ஜி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, கடந்த 5 மாதங்களில் முதுகுப் பிடிப்பு, தசைப்பிடிப்பு மற்றும் காலில் காயம் என அடுத்தடுத்து 3 முறை காயமடைந்துள்ளார். எந்த ஒரு போட்டியிலும் ஆடாமலேயே காயத்தில் இருந்து மீண்டபின் செய்யப்படும் முதற்கட்ட பயிற்சியின் போதே அவருக்கு மீண்டும், மீண்டும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் அவர் தவித்து வருகிறார். 2026-ஆம் ஆண்டில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக வெறும் 14 டி20 போட்டிகளிலும், ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவின் ஏற்பட்டுள்ள தொடர் உடற்தகுதிப் பிரச்னை இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. நிதீஷ் குமார் ரெட்டி போன்ற மாற்று வீரர்கள் உருவாக்கப்பட்டாலும், ஹர்திக்கிற்கு இணையான தரத்தை அவர்களால் உடனடியாக எட்ட முடியவில்லை.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராம்ஜி சீனிவாசன், "உலகக்கோப்பையில் விளையாட வேண்டுமென்றால் ஹர்திக் பாண்டியா 10 ஓவர்களையும் முழுமையாகப் பந்துவீச வேண்டும். அதற்கு வலைப்பயிற்சியில் 15 முதல் 20 ஓவர்கள் வீசும் அளவுக்கு அவரிடம் முழு உடற்தகுதி இருக்க வேண்டும். கடுமையான காயங்களை எதிர்கொண்டு மீண்டும் வலிமையுடன் மீண்டு வந்த ஜாகீர் கான், லட்சுமிபதி பாலாஜி மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரிடம் ஹர்திக் பேச வேண்டும். அவர்கள் தங்களது உடற்தகுதியை எவ்வாறு பராமரித்தார்கள் என்பதைக் கேட்டு பாடம் கற்க வேண்டும். 2012 டி20 உலகக்கோப்பையில் பாலாஜி எவ்வாறு வெற்றிகரமாக மீண்டு வந்தார் என்பதை அவர் கவனிக்க வேண்டும்" என்றார்.
அதேபோல் தேசிய கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் உடற்பயிற்சி நிபுணர் தீபக் சூரி கூறுகையில், பந்துவீசும்போது ஹர்திக் தனது உடல் எடையை கால்களில் சமமாகப் பகிர்வதில் குறைபாடுகள் உள்ளன என்றும், இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார். 2027 உலகக்கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியை எட்டுவாரா என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.