கைவிட்ட மும்பை இந்தியன்ஸ்.. சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த கீரன் பொல்லார்ட்.. 16 ஆண்டு ஏல சம்பவம்
கைவிட்ட மும்பை இந்தியன்ஸ்.. சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்த கீரன் பொல்லார்ட்.. 16 ஆண்டு ஏல சம்பவம்
ஜோகன்னஸ்பர்க்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்ந்த நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்டை, தென் ஆப்பிரிக்க டி20 லீக் ஏலத்தில் சிஎஸ்கே நிறுவனத்தின் மற்றொரு அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 1.5 மில்லியன் ரான்ட் (சுமார் 87 லட்சம்) தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டி20 தொடரான எஸ்ஏ20 தொடரின் 5-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு அணியான எம்ஐ கேப்டவுன் அணியால் விடுவிக்கப்பட்ட அதிரடி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டை வாங்க சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஆர்வம் காட்டியது. ஏலத்தில் அதிகபட்சமாக 20.6 மில்லியன் ரான்ட் இருப்பு வைத்திருந்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, பொல்லார்டை 1.5 மில்லியன் ரான்ட் கொடுத்து தங்கள் வசப்படுத்தியது.
இதன் பின்னணியில் 16 ஆண்டுகால சுவாரசிய வரலாறு உள்ளது. கடந்த 2010 ஐபிஎல் ஏலத்தின் போது பொல்லார்டை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. அப்போது ரகசிய டை பிரேக்கர் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரைத் தட்டிச் சென்றது. அந்த ஏலத்திற்குப் பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து, தற்போது சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து இருக்கிறார் கீரன் பொல்லார்ட்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 13 சீசன்களில் ஆடிய பொல்லார்ட், 3412 ரன்களையும், 69 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற 5 ஐபிஎல் கோப்பைகளிலும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளிலும் இவர் முக்கிய வீரராக இருந்தார். பின்னர் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த பொல்லார்ட், தற்போது சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற உடையில் தனது பழைய அணிக்கு எதிராகவே களமிறங்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.