📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 27, 2026 07:01 PM

தவறாக நீக்கப்பட்டதாக நிறுவனத்திற்கு எதிராக முன்னாள் ஊழியர் வழக்கு

தவறாக நீக்கப்பட்டதாக நிறுவனத்திற்கு எதிராக முன்னாள் ஊழியர் வழக்கு

‘குளோபல்ஃபவுண்ட்ரீஸ் சிங்கப்பூர்’ என்ற கணினி சில்லுத் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக அதன் முன்னாள் ஊழியர் ஒருவர் 528,000 வெள்ளி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் நீண்டகால ஊழியரான லியோங் இங் வா, தவறாக தான் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

ஊழல் விசாரணைகளுக்கு இடையே மேலாளரான லியோங் 2023ல் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்கால வருமான இழப்பு, செலவுகளை நீதிமன்றம் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றம் விசாரணை நடத்தியபோது அந்த விவகாரத்தில் தமக்குத் தொடர்பு இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே தன்னை பணிநீக்கம் செய்துவிட்டதாக லியோங் குற்றஞ்சாட்டியிருப்பது நீதிமன்ற ஆவணங்கள் வழியாகத் தெரிய வருகிறது.

முன்னர் சார்ட்டர்ட் செமிக்கண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் என்று அழைக்கப்பட்ட குளோபல்ஃபவுண்ட்ரீஸ் சிங்கப்பூர், பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாகவும் தானும் மற்றொரு மேலாளரும் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதே தன்னை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவெடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2024ல் முடிவடைந்த விசாரணையில் லியோங் மீதான வழக்கை லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றம் கைவிட்டது. மற்றொரு ஊழியருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையும் $47,600 அபராதமும் விதிக்கப்பட்டது.

2023 ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட உடனடி பணிநீக்கக் கடிதத்தில் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கப் போதுமான அவகாசமோ, வாய்ப்போ வழங்கப்படவில்லை என்று லியோங் குறிப்பிட்டுள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குளோபல்ஃபவுண்ட்ரீஸ், லியோங்கின் பணிநீக்கம் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று அல்ல என்று உறுதியாகக் கூறியது.

அவரிடம் உரிய விசாரணையை நடத்தியதாகவும் அவருக்குத் தனது தரப்பு விளக்கத்தை கூறவும் வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.