தவெகவில் போதை மாபியா... ஊருக்கு மட்டும் உபதேசமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அறிக்கை; TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party, மத்திய அரசின் டிஆர்ஐ அதிகாரிகளால் நாகை மாவட்ட தவெக நிர்வாகியும், கீழ்வேளூர் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதல்வர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் தவெக தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த நெட்வொர்க்கையும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் தவெகவில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
'பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்' என முதல்வர் இதற்கும் பஞ்ச் டயலாக் அடிக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.