தண்டவாளத்தில் மண்சரிவு: ஊட்டி மலை ரெயில் 2
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒருநாள் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணி நடந்தது. இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லார்-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. 3 இடங்களில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிந்து, மரங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை நேற்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அவர்களுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் ரெயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள் அகற்றப்பட்டன. மண் சரிவால் சேதமடைந்த ராக் பார்கள் மற்றும் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டன. அங்கு சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்த பிறகு மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.