📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 12:04 PM

தலைமைத்துவப் புதுப்பிப்பிற்கு முன்னுரிமை: பிரதமர் வோங்

தலைமைத்துவப் புதுப்பிப்பிற்கு முன்னுரிமை: பிரதமர் வோங்

சிங்கப்பூரின் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், நாட்டின் தலைமைத்துவத்தைப் புதுப்பிப்பதும் அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதும் ஆகியவை தமது மிக முக்கியமான முன்னுரிமைகளாக இருந்து வருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

‘அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2026ஆம் ஆண்டு சம்பள மறுஆய்வு அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் முடிவை அறிவிக்கும் வகையில் நிதி அமைச்சருமான திரு வோங், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) அமைச்சர்நிலை அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

நாட்டின் நிர்வாகச் சேவைகளிலும் தனியார் துறையிலும் சம்பளம் தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில், அரசியல் பதவிகளுக்கான ஊதியம் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் ஒரே நிலையிலேயே நீடித்து வருவதை சுட்டிய அவர், இந்தச் சம்பளத் தேக்கநிலை, தகுதியான புதிய முகங்களை அரசியலை நோக்கி ஈர்க்கும் பணியை மேலும் சவாலானதாக மாற்றியுள்ளது என்றார்.

முந்தையப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக, அரசியல் தலைமைத்துவத்திற்குப் பொருத்தமான குணநலன்களும் திறமையும் கொண்ட பல மூத்த நிரந்தரச் செயலாளர்களைத் தாம் அணுகியதாகக் குறிப்பிட்டார் பிரதமர்.

ஆனால் அவர்களில் எவரும் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கவில்லை என்று அவர் கூறினார்.

ஆயினும், ஜெஃப்ரி சியாவ், டேவிட் நியோ, ஜாஸ்மின் லாவ் போன்ற ஆற்றல்மிக்க இளைய அதிகாரிகளைத் தமது குழுவில் இணைக்க முடிந்தது ஆறுதல் அளிப்பதாகத் திரு வோங் கூறினார்.

தமது அமைச்சரவையின் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த அங்கத்தினர்களாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங், மூத்த அமைச்சர் கா. சண்முகம் , வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த அரசுப் பதவிக் காலத்திற்குள் 70 வயதைக் கடந்து விடுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் நிர்வாகத்தின் வலிமைக்கும் அரசாங்கத்தின் நன்மைக்கும் அடுத்த தலைமுறையினர் பொறுப்புகளைக் கையில் எடுப்பது இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.