📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 01:04 PM

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்வு: $18,500 ஆக அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்வு: $18,500 ஆக அதிகரிப்பு

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்தரப் படித்தொகை, தற்போதைய $13,750லிருந்து $18,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாகப் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சான் சுன் சிங் அறிவித்துள்ளார்.

அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

அதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) பேசிய தற்காப்பு அமைச்சருமான திரு சான், கடந்த 2012ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்தரப் படித்தொகையின் அளவே பொருத்தமானது என்ற அப்போதைய மதிப்பீட்டைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப அதனைத் தற்காலத்திற்கு உகந்ததாகப் புதுப்பிப்பதே தற்போதைய மறுசீரமைப்பின் நோக்கம் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் களத்தில் தங்களின் கடமைகளைச் சிறப்பான முறையிலும் உண்மையாகவும் ஆற்றுவதற்குப் போதிய ஆதரவை வழங்குவதையே இந்த நடைமுறைப் புதுப்பிப்பு உறுதி செய்வதாகவும் அவர் மேலும் விளக்கினார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் படித்தொகை, எம்ஆர்4-நிலை அமைச்சரின் ஆண்டு சம்பளத்தில் 17.5 விழுக்காடாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் போன்ற சமூகக் கடமைகளை ஆற்றும் பதவிகளுக்கான அம்சங்கள், முழுநேர அரசியல் பதவி வகிப்பவர்களிடமிருந்து மாறுபடலாம் என்பதை மறுஆய்வுக் குழு கவனித்துள்ளது.

எனவே, வருங்காலத்தில் இந்த மாதாந்திரப் படிகளை எம்ஆர்4 சம்பள ஒப்பீட்டிலிருந்து விடுவிப்பதுடன், அதேவேளையில் அவர்கள் தங்களின் பணிகளைத் திறம்படச் செய்யப் போதியத் தொகையை உறுதி செய்யும் புதிய கணக்கீட்டு முறையை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் ஆராயும் என்றும் அமைச்சர் சான் தெரிவித்தார்.