திருநெல்வேலியில் 55 வணிக மனைகள்: தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு!
திருநெல்வேலியில் 55 வணிக மனைகள்: தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு!
நெல்லை வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள 55 வணிக மனைகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
வணிகம் தொடங்குவதற்காக நிலம் தேடும் தொழில் முனைவோர், கடை அமைக்க விரும்புபவர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்காக மனை வாங்க விரும்புபவர்கள் பங்கேற்கலாம். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் விற்பனையாகாமல் உள்ள வணிக மனைகள் மற்றும் கடை மனைகள் இதன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் e-Procurement இணையதளம் வாயிலாக மின்னணு ஒப்பந்தம் மற்றும் மின்னணு ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.
மனையின் அளவு, இடம், அடிப்படை விலை, ஏல நிபந்தனைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். திருநெல்வேலி போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கான மனைகளுக்கு அதிக தேவை உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வணிக மனைகள் ஏலம், சொந்த இடத்தில் கடை அல்லது தொழில் தொடங்க விரும்புவோருக்கு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட பல்வேறு திட்டப்பகுதிகளில் காலியாக உள்ள 55 வணிக மனைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழநத்தம் பகுதி 1, பாளையங்கோட்டை பகுதி I மற்றும் II, தென்காசி, வல்லன்குமாரன்விளை, வி.எம்.சத்திரம் நிலை II ஆகிய திட்டப்பகுதிகளில் வணிக மனைகள் உள்ளன. இதுதவிர குலவணிகர்புரம், சங்கரப்பேரி, மீளவிட்டான், நாரணம்மாள்புரம் திட்டப்பகுதி 1 மற்றும் நாரணம்மாள்புரம் பகுதி II ஆகிய பகுதிகளிலும் காலி வணிக மனைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 55 வணிக மனைகளுக்கான விற்பனை விவரங்கள் மனையின் அளவு, விலை உள்ளிட்ட தகவல்களை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
வணிக நோக்கத்திற்காக மனைகளை பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வணிக மனைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 09.10.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள பொதுமக்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் ஜாண் ஜோசப் ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnhb.tn.gov.in ஐ பார்வையிடலாம்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி