📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 12:03 AM

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டி; தி.மு.க., வேட்பாளர் மீது தேர்தல் கமிஷனில் தவெக புகார்

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டி; தி.மு.க., வேட்பாளர் மீது தேர்தல் கமிஷனில் தவெக புகார்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டி அளித்ததாக, மதுராந்தகம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பரந்தாமன் மீது, தேர்தல் கமிஷனில் த.வெ.க., புகார் அளித்துள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சரும், த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலருமான ஆதவ் அர்ஜுனா தரப்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனு விபரம்:

தேர்தல் நடத்தை விதிகள் படி, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 4 ம் தேதி மாலை 6:00 மணிக்கு பின், எந்த வடிவத்திலும் பிரசாரம் செய்யக் கூடாது.

வேட்பாளர்களின் சாதக பாதங்களை வாக்காளர்கள் ஆராய்ந்து, சிந்தித்து ஓட்டளிப்பதற்காக, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரம், பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஆனால், மதுராந்தகம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பரந்தாமன், தி.மு.க., தலைமை அலுவலகத்தில், செய்தியாளர் சந்திப்பு நடத்தி, நேரடியாக ஓட்டு கேட்டுள்ளார். தேர்தல் கமிஷனின் விதிகளுக்கு அஞ்சாமல், எல்லா வழிகளிலும் மீறியுள்ளார்.

அவரது செயல், வாக்காளர்களின் சுதந்திரமான சிந்தனையில் தலையிடுவதற்கு சமம். எனவே, பரந்தாமன் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தொகுதிக்குள் நுழைய, அவருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.