காங்கிரஸ் போலி வாக்காளர்களை பாதுகாக்க விரும்புகிறது: பாஜக
SIR மூலம் 13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. SIR நடவடிக்கையின்போது வாக்காளர் சேர்ப்பதற்கான படிவம் எண் 6-ல் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக செய்திகள் வெளியானது. இதனால் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இன்று ராகுல்காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் தலைமையகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி போலி வாக்காளர்களை பாதுகாக்க விரும்புகிறது என பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் தரவுகள்படி 2.8 கோடி வாக்காளர்கள் காலமாகிவிட்டனர். 6.3 கோடி வாக்காளர்கள் முகவரி மாறி சென்று விட்டார்கள். ஒரு கோடி வாக்காளர்கள் பெயர் போலிப்பதிவுகள் என்பதால் நீக்கப்பட்டுள்ளது. 3 கோடி பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சி போலி வாக்காளர்களை காப்பாற்ற முயற்சிக்கிறதா?.
நான் காங்கிரஸிடம் தெளிவாகக் கேட்க விரும்புகிறேன். எந்த விசாரணையுமின்றி, வராதவர்கள், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதன் மூலம் அவர்கள் யாருக்குப் பயனளிக்க விரும்புகிறார்கள்? இதைச் செய்வதன் மூலம் காங்கிரஸ் யாருக்காவது பயனளிக்க விரும்புகிறதா?
இவ்வாறு சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.
13.3 கோடி வாக்காளர்கள் நீக்கியது இறுதியானது அல்ல
இதுவரை 30 மாநிலங்களில் SIR நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. அப்போது 13.3 கோடி வாக்காளர்கள் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
13 கோடி என்பது இறுதியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை கிடையாது. வரைவு பட்டியில் பெயரில் இல்லை என்ற கோரிக்கை, ஆட்சேபனை, சேர்ப்பதற்கான உரிமை கோரல் உள்ளிட்டவைகளுக்கு பிறகு உறுதி செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் 13 கோடி பேரை எங்களால் தொடர்பு கொள்ள முடிகிறது என்று காங்கிரஸ் கட்சி சொல்கிறது.