📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 01, 2026 11:03 AM

 தாராபுரம் இடைத்தேர்தல்: தலைவர்கள் முற்றுகை

 தாராபுரம் இடைத்தேர்தல்: தலைவர்கள் முற்றுகை

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. வரும் 6-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் இறுதிக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இறுதிப்பட்டியலில் 22 வேட்பாளர்கள் இருந்தாலும், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது.

கடந்த காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க., என மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதியில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த சத்தியபாமாவை த.வெ.க., வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

இதனால், அவரது அரசியல் பயணம் மற்றும் கட்சி மாறிய விவகாரம் பிரசாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), லட்சுமணன் (இந்திய கம்யூ.), கார்த்திகா (நாம் தமிழர்) ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர்.

சத்தியபாமாவை ஆதரித்து த.வெ.க., தலைவர் விஜய் நேற்று தாராபுரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். வேட்பாளர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது.

தாராபுரத்தில் வரும் 4-ம் தேதியும் விஜய் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாளை (2-ம் தேதி) பிரசாரம் செய்ய உள்ளார். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஓட்டு சேகரித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஓட்டுக்கும் குறி வரும் 4-ம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதால், அதற்கு முன்பாக அதிகபட்ச வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட கட்சிகள் இரவு பகலாக சுழன்று வருகின்றன.

வரும் 6-ம் தேதி ஓட்டுப்பதிவும், 9-ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அடுத்த சில நாட்கள் தொகுதி முழுவதும் அரசியல் பரபரப்பு நீடிக்க உள்ளது.