ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் நண்பர் வாளாடி கார்த்திக் விசாரணைக்கு ஆஜர்
ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் நண்பர் வாளாடி கார்த்திக் விசாரணைக்கு ஆஜர்
ஏற்கனவே வாளாடி கார்த்திக்குக்கு சொந்தமான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
Published : September 22, 2026 at 10:49 PM IST
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாளாடி கார்த்திக், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அரசு அங்கீகாரம், தர உயர்வு உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி முந்தைய ஆட்சியில் பல பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத்திலும் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு அன்பில் மகேஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஸ் கடந்த வாரம் ஆஜரானார். அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது தனியார் பள்ளி நிர்வாகிகளுடனான தொடர்பு, வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களுடனான தொடர்பு, பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை குறித்து கேள்வியெழுப்பப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, அன்பில் மகேஸின் சிறப்பு உதவியாளராக இருந்த அருள் முருகனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில்தான், அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பராக கருதப்படும் வாளாடி கார்த்திக்கை நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதன்பேரில், சென்னை வெப்பேரியில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வாளாடி கார்த்தி இன்று நேரில் ஆஜரானார்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் வாளாடி கார்த்திக்கிடம் பல மணிநேரமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.