முதல்வர் பங்கேற்கும் தங்கமோதிர திட்டம்: உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு மாற்றம்
மதுரை: செப்.,28 ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில், தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அதிகாரிகள் குழுவினர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அங்கு முதல்வர் விஜய் பங்கேற்பதற்கான திட்டம் தொடங்கப்பட இருந்த நிலையில் ஒருகிராம் அளவிலான 1106 தங்க மோதிரங்கள், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனை, உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம் அரசு மருத்துவமனைகள் தங்கமோதிரம் வழங்கும் மையமாக இயங்கும். இதற்கென இந்த மையங்களில் பாதுகாப்பு பெட்டக வசதி செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், துணை மையங்கள், நகர்ப்புற மையங்களில் இந்தாண்டு ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து தங்கமோதிரம் வழங்கப்படும்.
மதுரை அரசு மருத்துவமனை, மாநகராட்சிக்கு தொடர்புடைய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு மதுரை அரசு மருத்துவமனை மூலமாக தங்கமோதிரம் வழங்கப்படும்.
மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் மாதந்தோறும் 1000 முதல் 1200 பிரசவங்கள் நடக்கிறது. முதற்கட்டமாக 4150 மோதிரங்கள் இங்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம்., கார்டு வடிவ அட்டையில் முதல்வர் விஜய் உருவப்படம் பொறிக்கப்பட்டு அதனுள்ளே தங்கமோதிரம் வைக்கப்பட்டுள்ளது. வரும் செப்.,27ல் பிறக்கும் குழந்தைகள், அதற்கு முன் பிறந்த குழந்தைகள் என 50 பேருக்கு மருத்துவமனை ஆடிட்டோரியம் அல்லது முதலுதவி பிரிவில், செப்.,28 ல் முதல்வர் விஜய் வழங்க உள்ளார். தொடர்ந்து மகப்பேறு வார்டில் உள்ள, குழந்தை பெற்ற பெண்கள் 20 பேரை தரைத்தளத்திற்கு வரவழைத்து தங்கமோதிரம் வழங்குவார்.
இதற்கான வசதிகள் உள்ளதா என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இன்று (செப்.,22) சென்னையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் இடத்தை பார்வையிட்டபின் மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் பகுதி, நேரம் உறுதி செய்யப்படும்.