📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 22, 2026 05:03 PM

பொன்னேரி மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் மீது தீ வைப்பு: குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

பொன்னேரி மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் மீது தீ வைப்பு: குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனை தற்காலிக பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றவர், எஸ்ஐயை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவின் கணினி பிரிவில் கடந்த 9 மாதங்களாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த ராஜேஸ்வரி (34), வழக்கம் போல் நேற்று காலை பணிக்குச் சென்றார். பிறகு நேற்று மாலை பணி முடிந்து, வீடு திரும்புவதற்காக ராஜேஸ்வரி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து, மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர், மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றினார். இதனால், அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையினுள் செல்ல முயன்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற அந்த மர்ம நபர், ராஜேஸ்வரி மீது தீ வைத்துவிட்டு தப்பியோடினார்.

இதில், உடலின் பல்வேறு பகுதிகளில் தீக்காயமடைந்த ராஜேஸ்வரி, மருத்துவமனையின் சக ஊழியர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து முதலுதவி சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே பொன்னேரி ஜே.எம். 1 நீதிமன்ற நீதிபதி சரண்யா செல்வம், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பொன்னேரி போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில்,“ராஜேஸ்வரிக்கும், பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் வசித்து வந்த பிரகாஷ் (38) என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராஜேஸ்வரி, பிரகாஷுடனான நட்பை துண்டித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றது’’ தெரிய வந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜேஸ்வரி மீது பெட்டோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய பிரகாஷ், பொன்னேரி அருகே மாதவரம் அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள மயானப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் தமிழரசன் உள்ளிட்டோர் அடங்கிய போலீஸார், பெருஞ்சேரி மயானத்துக்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த பிரகாஷை சுற்றி‌ வளைத்து கைது செய்ய முயன்றனர்.

அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உதவி காவல் ஆய்வாளர் தமிழரசனை வெட்டி விட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சிவகுமார் துப்பாக்கியால் பிரகாஷின் காலை நோக்கிச் சுட்டார். இதனால், துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த பிரகாஷை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து, காயமடைந்த உதவி காவல் ஆய்வாளர் தமிழரசன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீஸார் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.