📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 04:03 AM

‘ஃப்ளை துபாய்’ விமான சம்பவ பின்னணி குறித்த விசாரணைக்கு யுஏஇ உத்தரவு

‘ஃப்ளை துபாய்’ விமான சம்பவ பின்னணி குறித்த விசாரணைக்கு யுஏஇ உத்தரவு

அபு தாபி: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘ஃப்ளை துபாய்’ விமானத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி புதன்கிழமை காலை 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த ‘காக்பிட்’ அறையில் பைலட், துணை பைலட் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

விமானத்தின் பைலட்டைக் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திவிட்டு விமானத்தின் துணை பைலட் விமானத்தைக் கடத்தி தரையில் மோத முயற்சித்ததாக விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.

எனினும், இந்தியாவைச் சேர்ந்த விமான ஸ்மித் மச்சார், துணிச்சலாகப் போராடி விமானத்தைத் தனதுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.

இந்தச் சம்பவம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விமானி ஸ்மித் மச்சாரைப் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஃப்ளை துபாய் விமானம் FZ1073 வழி மாற்றப்பட்டு சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது தொடர்பான சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, விமானத்தில் பயணித்த பணியாளர்கள் தலையிட்டு விமானத்தை பாதுகாப்பாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ஃப்ளை துபாய் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் ஹமத் அல் ஷம்சி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் தேசிய கொடியைக் கொண்டிருப்பதால் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. விமானத்துக்குள் நிகழும் குற்றங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் எல்லைக்கு வெளியே நடந்தாலும், அதன் மீது ஐக்கிய அரபு அமீரகச் சட்டமே பொருந்தும்.

பயங்கரவாத நோக்கம் ஏதும் இதில் உள்ளதா, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்வது இந்த விசாரணையில் அடங்கும்.

இந்தச் சம்பவத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. விசாரணை முடிந்து அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அதிகாரப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே நம்புமாறும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதை தவிர்க்குமாறும் அமைச்சகம் வலியுறுத்துகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.