📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 09:04 AM

திமுக, அதிமுக, தவெக பணப்பட்டுபாடாவை கலச்சாரமாக மாற்றிவிட்டன

திமுக, அதிமுக, தவெக பணப்பட்டுபாடாவை கலச்சாரமாக மாற்றிவிட்டன

திமுக, அதிமுக, தவெக பணப்பட்டுபாடாவை கலச்சாரமாக மாற்றிவிட்டன- சிபிஐ வீரபாண்டியன் வேதனை

திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் ஊர் எல்லைகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு பணம் தரலாம் என்று கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Published : October 1, 2026 at 10:30 PM IST

சென்னை: திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளுமே பணப்பட்டுபாடாவை ஒரு கலாச்சாரமாக மாற்றிவிட்டன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்திட வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை கே.கே.நகர் எம்.ஜி.ஆர். மார்க்கெட் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையே வாக்குச்சீட்டுதான். கடைக்கோடியில் இருப்பவராக இருந்தாலும், டாடா, பிர்லா, அம்பானி என யாராக இருந்தாலும் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு மதிப்பு. இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.

வாக்குரிமையின் கழுத்தை அறுக்கும் செயலுக்கு நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சருமே நேரடி மற்றும் தார்மிகப் பொறுப்பேற்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலகும் வரை இடதுசாரிகளின் போராட்டம் தொடரும்.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகள், அரசியல் உரையாடலோ, கருத்து விவாதமோ நடத்துவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே வீடு வீடாகச் சென்று ஏழை மக்களின் முகத்தைப் பார்த்து அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்டு வாக்குகளைக் கேட்கின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையை வரையறுத்த ராட்க்ளிஃப் என்பவரை போல, திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் ஊர் எல்லைகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு பணம் தரலாம் என்று கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்குச்சீட்டு என்பது நீண்ட போராட்டத்தின் தியாகத்தால் கிடைத்தது. அதை விலைக்குப் பேசுவதும் விலை போவதும் குற்றம். வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால் தற்போதைய சூழலில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் மற்றும் காந்தியின் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

தேர்தலில் வெற்றி, தோல்வி மிக இயல்பானது. ஆனால், 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பது, அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. இதற்குக் காரணமானவர்களை வரலாறு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும்.திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளுமே பணப்பட்டுவாடாவை ஒரு கலாச்சாரமாக மாற்றிவிட்டன. தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கு மட்டுமானது அல்ல.

மேகதாது அணை விவகாரம், பழங்குடி மக்கள் வெளியேற்றம், சர்வதேச அளவில் இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு போன்ற உண்மையான மக்கள் பிரச்சினைகளைத் தேர்தல் அரசியலில் பேச வேண்டும்.

வாக்குரிமை என்பது அரசியல் சாசனம், போராடிப் பெற்றுத் தந்த நம் உரிமை. வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும் சட்டத்தின் ஆட்சியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழக அரசும் முதல்வரும் பாஜகவை விமர்சித்து வெளிப்படையாக நிலைப்பாடு எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.