பாகிஸ்தான்: கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இம்ரான் கான் கட்சியின் ஆட்சி களைப்பு அவசரநிலை பிரகடனம்
கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் அவசரநிலையை அறிவித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்ததாலும், இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி பிடிஐ கட்சி போராட்டங்களை தீவிரப்படுத்தியதாலும் ஏற்பட்ட கடுமையான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மாகாணத்தில் இம்ரான் கான் ஆட்சியை களைத்து ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி அவசரநிலையை அறிவித்தார்.
இம்ரான் கான் - பயங்கரவாதம்
சிறையில் உள்ள இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி பிடிஐ கட்சி பல நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறது.
மேலும், வரும் நாட்களில் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
அதேநேரம் பக்துன்க்வா பிராந்தியத்தில் தெஹ்ரிக்-இ-தாலிபான் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
இதன் பின்னணியில், கைபர் பக்துன்க்வாவில் அவசரநிலையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மாகாண அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, மாகாண அரசின் செயல்பாடுகள் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
அவசரநிலை காலத்தில் மாகாண நிர்வாகத்தின் எந்தெந்த செயல்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்பது குறித்து மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பிடிஐ விமர்சனம்
அவசரநிலை பிரகடனப்படுத்தும் முடிவை பிடிஐ செய்தித் தொடர்பாளர் சுல்பிகார் புகாரி விமர்சித்தார்.
சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட நாட்டின் ஒரே மாகாணம் கைபர் பக்துன்க்வா தான். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் ரத்தக்களரிக்கும் ஸ்திரத்தன்மையின்மைக்கும் வழிவகுக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
வாய்ப்பு இருந்தபோதிலும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் புகாரி குற்றம் சாட்டினார்.