📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News October 12, 2026 04:03 PM

சவுதி ரியாத் விமான நிலைய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு; பலர் படுகாயம்

சவுதி ரியாத் விமான நிலைய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு; பலர் படுகாயம்

ரியாத் விமான நிலைய கூரையைத் துளைத்த ஏவுகணை: இந்தியர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலின் பதறவைக்கும் காட்சி

விமான நிலைய தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published : October 12, 2026 at 10:56 AM IST

ரியாத்: ரியாத் விமான நிலைய தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட பல இந்தியர்கள் இந்த தாக்குதலில் காயமடைந்தனர்.

ரியாத் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிசிடிவி காட்சிகளை அல் அரபியா நெட்வொர்க் வெளியிட்டிருக்கிறது. ஹவுதி ஏவுகணைகள் விமான நிலையை கூரையை துளைத்து அங்கிருந்த பயணிகளை தாக்கும் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

சவுதி அரேபியா ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 10) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உட்பட பலர் உயிரிழந்தனர். தாக்குதலில் உயிரிழந்த நபர் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது யூசுப் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்திய தூதரகம் இரங்கல்

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம், “ரியாத் தாக்குதலில் காயமடைந்த இந்தியர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் அவருடைய குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இறந்தவரின் உடலை விரைந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிற மருத்துவமனைகளை அதிகாரிகள் பார்வையிட்டதாகவும் தூதரகம் தெரிவித்திருக்கிறது. அவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், அவர்களுடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Further Update regarding Riyadh airport attack: - Our Embassy officials have visited all hospitals where Indian nationals injured in the attack have been admitted. As mentioned earlier, 1 Indian national unfortunately passed away today, 3 are in ICU but stable, 2 more are admitted in normal wards while others have been discharged. - We thank the Saudi authorities for the medical care provided to the injured Indian nationals and assure the families that the Embassy will provide all possible support. @MEAIndia

இருவர் சாதாரண வார்டில் சிகிச்சையில் உள்ள நிலையில், லேசாக காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. காயமடைந்த இந்தியர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய சவுதி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், “ரியாத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிந்திருப்பது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்திய தூதரகம் அவருடைய குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Deeply grieved at the loss of life of an Indian national in the Riyadh attack. My heartfelt condolences to the bereaved family. The Embassy will extend all possible assistance.

ரியாத் தாக்குதலில் உயிரிழந்த யூசுப் அலியின் குடும்பத்தினரும் படுகாயமடைந்துள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்மிலீன் தலைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். தாக்குதலில் படுகாயமடைந்த யூசுப் அலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில, அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹைதராபாத் மெஹ்திபட்னத்தைச் சேர்ந்த யூசுப் அலியுடன் சென்றிருந்த அவரது இரண்டு மகன்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒரு மகனுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு மகனுக்கு 3 கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஓவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விமான நிலைய தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் நான்கு பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியா, பாலஸ்தீனம், அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, சூடானை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மீண்டும் தாக்குதல்

சனிக்கிழமை நடந்த தாக்குதலின் தாக்கம் அடங்குவதற்குள் நேற்று மீண்டும் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஹவுதிக்கள் புதிய தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து 2 நாட்களாக நடைபெற்ற தாக்குதல்களால் விமான நிலைய ரேடார் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஓடுபாதைகளை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் விமான போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.