📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 16, 2026 05:33 AM

நாளை மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்; செப்., 20 வரை கட்டண தரிசனம் இல்லை

நாளை மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்; செப்., 20 வரை கட்டண தரிசனம் இல்லை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இன்று அதிகாலை, 5:00 மணி முதல், 6:00 மணிக்குள் இதர தெய்வ சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பாபிஷேகம் முடிந்ததும், பக்தர்கள் ஒரே நேரத்தில் மேல்தளத்தில் இருந்து கீழே வருவதை தவிர்க்க, பகுதி பகுதியாக விடப்பட உள்ளனர்.

இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்து, கோவிலில் இருந்து பக்தர்கள் வெளியே வருவதை கணக்கிட்டு, நாளை காலை, 10:00 மணி வரை சித்திரை வீதிகளில், பாஸ் இல்லாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ''குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் குற்றத்தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளின் முகத்தை மொபைல் போனில் அடையாளம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

கும்பாபிஷேகத்தன்று துாய்மை பணிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து 1,000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கீழவெளிவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில், 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக ஐந்து தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை அரசு மருத்துவமனை சார்பில், செப்., 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செப்., 17 முதல் 20 வரை, கட்டண தரிசனம் கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

* மதுரை நகரின் முக்கிய இடங்களில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண, 51 மெகா திரைகள் அமைக்கப்பட்டுள்ளன* இரவில் எங்கிருந்தாலும் கோபுரங்களை காணும் வகையில், கோபுரத்தில் இருந்து லேசர் ஒளிக்கதிர்கள் வீச செய்துள்ளனர்* கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நகர் முழுதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது* சிறப்பு பணிக்காக வீரராகவராவ் உட்பட மூன்று மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை, தீயணைப்பு மாவட்ட அதிகாரி வெங்கட்ரமணன் உட்பட 100 துறை அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்* கும்பாபிஷேக புனிதநீரை கோவில் வளாகம், ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில், 'ஸ்பிரிங்க்ளர்' மூலம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது* குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க, அவர்களின் கைகளில் அடையாள 'டேக்' பொருத்தப்பட உள்ளது* அவசர கால தொடர்புக்கு இலவச எண்கள் 1800 -425 -6781 / 1800 -425- 6782 அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக சிறப்பு தொகுப்புகளை தினமலர் டிஜிட்டல் தளத்தில் பார்க்கலாம். www.temple.dinamalar.com/ meenakshi என்ற இணைய தளத்தில் மீனாட்சி கோயில் தொடர்பான தகவல்களை பார்க்க இத்துடன் உள்ள QR codeஐ ஸ்கேன் செய்யலாம்.