📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 22, 2026 02:03 PM

மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு: கொள்முதல் குறைந்ததால் பொதுமக்கள் பாதிப்பு!

மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு: கொள்முதல் குறைந்ததால் பொதுமக்கள் பாதிப்பு!

மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு: கொள்முதல் குறைந்ததால் பொதுமக்கள் பாதிப்பு!

மதுரை: மதுரையில் ஆவின் பால் கொள்முதல் குறையத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் முகவர்களுக்கு பால் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரை ஆவினைப் பொறுத்தவரை, நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான பால் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமான சூழ்நிலையைப் பொறுத்து, இந்த தேவையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லிட்டர் வரை கூடுதல் அல்லது குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மதுரை ஆவினுக்கு வரக்கூடிய பால் கொள்முதல் அளவு கணிசமாகக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு, குறிப்பாக ஆவின் முகவர்களுக்கு விநியோகிக்கப்படும் பாலின் அளவும் வெகுவாகக் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, ‘டிலைட்’ பால் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர். 10 பாக்கெட்டுகள் கேட்கும் நிலையில், 8 பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், பெட்டிகள் கணக்கில் வாங்கும்போது ரூ.10 ஆயிரத்திற்கு பால் கேட்டால், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பால் மட்டுமே வழங்கப்படுவதாகவும் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. தனியார் பால் ஒரு லிட்டர் சுமார் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் ஆவின் பாலை நாடி வருகின்றனர்.

ஆனால், போதுமான அளவில் பால் கொள்முதல் செய்யவும், அதேபோல் சீரான முறையில் பால் விநியோகம் செய்யவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பால் கொள்முதலை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் மற்றும் முகவர்களுக்கு சீரான முறையில் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.