📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 16, 2026 03:33 PM

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

உயர் நீதிமன்றம்

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.

தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்தச் செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம்,கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் அதை கேலிக் கூத்தாக்குகிறது. இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல். குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும், இதை தடுக்க இதுவரை எந்த வழிமுறைகளும் இல்லை. சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றனர்.

மேலும், ஏற்கெனவே இதுபோல வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.