📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 18, 2026 01:03 AM

மிஸ்டர் கழுகு: முதல்வரின் ஆந்திர விசிட்... நண்பருக்கு ஏக குஷி!

மிஸ்டர் கழுகு: முதல்வரின் ஆந்திர விசிட்... நண்பருக்கு ஏக குஷி!

மிஸ்டர் கழுகு: முதல்வரின் ஆந்திர விசிட்... நண்பருக்கு ஏக குஷி!

விஜயவாடா ஏர்போர்ட்டிலிருந்து கனக துர்க்கை அம்மன் கோயில் வரை முதல்வர் விஜய்யும் ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷும், ஒரே காரில் பயணிக்கத்தான் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்

“மழை தொடங்கிவிட்டது. ஆனால், மழைநீர் வடிகால் பணிகள்தான் இன்னும் முடியவில்லை... கஷ்டம்தான்!” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். ஆயுத பூஜை வாழ்த்து சொல்லிவிட்டு, பொரிகடலையைத் தட்டில்வைத்து நீட்டினோம். கொறித்துவிட்டு செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்து ஒட்டுமொத்த தி.மு.க-வும் ஜரூராகிவிட்டது. த.வெ.க அரசை ரவுண்டுகட்டி அடிக்கத் தொடங்கி விட்டனர். அடுத்ததாக, போராட்டக்களத்தில் த.வெ.க எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தவும் முடிவெடுத்திருக்கிறார்கள். ‘சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடக்கவில்லை’ என முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம், ஒரு தொடக்கப்புள்ளி என்கிறார்கள். இதற்கிடையே, ‘தேர்தல் நடத்தி மாவட்டச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, நியமனம் செய்து பட்டியலை விரைவில் வெளியிடுவேன். உற்சாகமாகக் களமாடுங்கள்’ என்று கட்சியினரிடம் சொல்லியிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.”

“கொளத்தூர் தொகுதியில், எஸ்.ஐ.ஆரால்தான் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோற்றதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறாரே?”

“ம்ம்... ‘கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டதாகச் சொல்வதெல்லாம் வெட்டிக்கதை’ என்பதுதான் திருமா சொல்லும் சேதி. ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி போட்டுக்கொண்டு எஸ்.ஐ.ஆரை தமிழகத்தில் அமல்படுத்தியதே தி.மு.க-தான்’ என்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அதற்கு நேரெதிர் நிலைப்பாடு எடுத்து, ‘பா.ஜ.க-வின் கொள்கை எதிரி ஸ்டாலின். அவர் தோற்கடிக்கப்பட்டதில் சதி நடந்திருக்கிறது’ என்கிறார் திருமா. நாளுக்கு நாள் த.வெ.க - வி.சி.க இடையே முரண்பாடுகள் வெடித்து பொதுவெளிக்கு வருகின்றன. ‘அண்ணன் கேட்பதையெல்லாம் செய்து கொடுக்கிறோமே... பின்னர் ஏன் நம்மைச் சீண்டுகிறார்?’ என்று புலம்புகிறார்கள் த.வெ.க முக்கியப்புள்ளிகள். ‘அண்ணா, அவரைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றுங்கள்’ என த.வெ.க-வின் விர்ச்சுவல் வாரியர்ஸ் பொங்குகிறார்கள்.”

“சரி... தாய்ச் சிறுத்தை ஏன் சீண்டுகிறதாம்?”

“எல்லாம் அரசியல் கணக்குதான். வி.சி.க-வைக் கூட்டணிக்குள் வைத்துக்கொண்டு, மறுவாசல் வழியாக பா.ம.க-வைக் கூட்டணிக்குள் அழைத்துவர முயன்றால், திருமா சும்மா இருப்பாரா... இதற்கிடையில், வன்னி அரசுவை அமைச்சராகத் தொடரவைப்பதில் திருமாவுக்குச் சில சங்கடங்களைக் கொடுக்கிறார்களாம் கட்சியின் மற்ற சீனியர்கள். அதற்கெல்லாம் தீர்வாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் திருமா போட்டியிட்டு, அமைச்சரவையில் நுழையும் ஐடியாவை சீனியர்கள் கொடுத்திருக்கிறார்கள். திருமாவைக் கூட்டணிக்குள் வைத்திருக்க விரும்பும் இரண்டு அமைச்சர்கள், ‘நீங்கள் அமைச்சராகிவிட்டால், சிதம்பரம் எம்.பி தொகுதியை த.வெ.க-வுக்கு விட்டுத்தர வேண்டும்’ என்ற நிபந்தனையோடு ஐடியாவுக்கு ஓ.கே சொல்லியிருக்கிறார்கள். விஷயம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, அவர் எந்த பதிலும் சொல்லவில்லையாம். அதில் திருமா அப்செட்!”

“அது சரி... வைகோவும் மாணிக்கம் தாகூருமே அப்செட் என்கிறார்களே?”

“இருக்கத்தானே செய்யும்... எஸ்.ஐ.ஆருக்கு எதிராகவும் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், அக்டோபர் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்திருந்தது காங்கிரஸ். ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்க, கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தங்கள் சார்பில் ஒரு நிர்வாகியைப் பொறுப்பாளராக அளித்திருக்கிறார்கள். ஆனால், த.வெ.க மட்டும் பொறுப்பாளரை அளிக்காமல் தவிர்த்துவிட்டது. இதனால், அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.”

“அதில் அப்செட்டான மாணிக்கம் தாகூர், தலைநகர் சென்னையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறார். சீனியர் அமைச்சர்களைக் கலந்துகொள்ளச் சொல்லி த.வெ.க தலைமையை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், பள்ளிக்்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறது த.வெ.க மேலிடம். ‘இவர்களுக்காக எவ்வளவு சொல்லடிகளை வாங்குகிறோம். மதிக்க மாட்டேன் என்கிறார்களே...’ என்று கொதித்துவிட்டாராம் மாணிக்கம் தாகூர். அதேபோல எதிர்பார்த்த மரியாதை கிடைக்காததால் வைகோவுமே அப்செட்டில்தான் இருக்கிறார்” என்ற கழுகார், ‘‘கடந்த இதழில் வெளியான ‘டீ’ ஓகே... டீல் நோ’ என்ற தலைப்பிட்ட கட்டுரைக்கு மாணிக்கம் தாகூரின் ஆதங்கம் குறித்துக் கேள்விப்பட்டீரா?’’ எனக் கேட்டார்.

‘‘தகலைச் சொல்லும்...’’ என்று கழுகாரை நேராகச் செய்திக்குள் இழுத்தோம்.

‘‘முதல்வர் விஜய்யை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்தபோது நடந்த நிகழ்வுகள், எஸ்.ஐ.ஆர் சம்பந்தமாக நடந்த உரையாடல்கள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதப்பட்ட அந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்துக்கு எதிராக, தன் முழு ஆதங்கத்தையும் கொட்டியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். ஆனால், எஸ்.ஐ.ஆர் விஷயத்தில் த.வெ.க நிலைப்பாடு குறித்து, காங்கிரஸ் தரப்பில் வருத்தத்துடன் எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலே சொல்லாமல் தாகூர் கடந்து சொல்வது, பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறதாம்...’’

‘‘நியாயம்தானே...’’

“கிருஷ்ணா - கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் விரிவாக ஆலோசித்திருக்கிறார் முதல்வர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கடலில் வீணாகும் 300 டி.எம்.சி கிருஷ்ணா நீர் தமிழகத்துக்குக் கிடைக்கும். அதன் மூலமாக, சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ‘காங்கிரஸ் கட்சிக்காக டெல்லியுடன் வீண் மோதல் வேண்டாம். டெல்லியிடம் என்ன உதவி தேவைப்பட்டாலும் சொல்லுங்கள், பேசிக் கொள்ளலாம்...’ என்று நாயுடு தரப்பு அர்த்தப் புன்னகையுடன் சொல்ல, புன்முறுவலுடன் கிளம்பியிருக்கிறது முதல்வரின் டீம். இந்த விசிட்டில் யார் சந்தோஷமாக இருக்கிறார்களோ, இல்லையோ... முதல்வரின் நண்பர் விஷ்ணு ரெட்டிக்கு ஏக குஷி. அவர் எதிர்பார்த்ததுபோலவே, ஆந்திரா தொடர்பு வலுவாக முதல்வருக்கு உருவாகிவிட்டது.”

“கனக துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையெல்லாம் தடபுடலாக நடந்ததாமே...”

“ஆமாம். ‘நவராத்திரி நாளில் கனக துர்க்கை அம்மனை வழிபட்டால், உங்கள் எதிரிகளை அழித்து வெற்றியைத் தருவார். அடுத்து வரும் இடைத்தேர்தல் அனைத்திலும் உங்களுக்கு ஜெயம்தான். உங்கள் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் வளம் பெறும்’ என்று ஜோதிடர் ஆலோசனை அளிக்க, கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக, சந்நிதியில் அமர்ந்து அம்மனை மனமுருக வழிபட்டிருக்கிறார் முதல்வர் விஜய். இரண்டு பேரின் பெயர்களுக்கு, சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டிருக்கிறது. ஜோதிடரின் அறிவுரையின்படி இரண்டு அம்மன் கோயில்களில் தரிசனத்தை முடித்துவிட்டார். அடுத்ததாக, கேரளாவிலுள்ள பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறாராம்.”

“ம்ம்... தூங்கா நகரில், லோன் நிறுவனத்தை ஆளும் தரப்பு எம்.எல்.ஏ மிரட்டுகிறாராமே?”

“என் காதுக்கும் அந்தச் செய்தி வந்தது. வீடு கட்டுவதற்காக அந்த லோன் நிறுவனத்திடம் 58 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார் அவர். மூன்றாண்டுகளாகியும்கூட லோனையும் செலுத்தவில்லை, வட்டியையும் முழுதாகச் செலுத்தவில்லை. இப்போது, நிலுவைத் தொகை 87.55 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிட்டதாம். கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும்படி லோன் நிறுவனம் கேட்டபோது, ‘நான் யார் தெரியுமா... கல்லணை கட்டிய மன்னரைவிடவும் மதிப்பு வாய்ந்தவன். இன்னும் ஒரு மாசத்துல அமைச்சராகப் போறேன். என்கிட்ட பணம் கேக்குறியா?’ என்று மிரட்டுகிறாராம் அந்த எம்.எல்.ஏ. ‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவின் ஆதரவு இருப்பதால், லோக்கலில் தான் வைத்ததுதான் சட்டம் என்று திரிகிறாராம். இப்போதே, ‘உனக்குத்தான் கவுன்சிலர் சீட்’ என்று சொல்லி பலரிடமும் கலெக்‌ஷனிலும் இறங்கிவிட்டதாகத் தகவல்.”

“தென்மாவட்ட தி.மு.க-வில் என்ன சலசலப்பு?”

“முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், ‘மா.செ பதவியும் போகப் போகிறது. நீங்கள் கேட்ட துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் கிடைக்கவில்லை. ஆகையால் சைலன்ட்டாகிவிடுங்கள்’ என யாரோ சொன்ன ஆலோசனையில்தான், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறாராம். அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுப்பதற்கு தங்கை தலைவி எதிர்ப்பு தெரிவிப்பதால், தென்மாவட்ட தி.மு.க-வில் அனல் வீசுகிறது” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“இந்து சமய அறநிலைத்துறையின் ‘மாண்புமிகு’வின் கெடுபிடிகளோடு கோயில் பிரசாதக் கடைகளுக்கான டெண்டரில், ‘அனுபவச் சான்றிதழ் தேவை’ என்பதை ஒரு கட்டுப்பாடாக நுழைத்திருக்கிறார்களாம். அனுபவச் சான்றிதழ் வைத்திருப்பவர்களைக் கைக்குள் போட்டு தி.மு.க., அ.தி.மு.க பிரமுகர்கள்தான் தங்கள் பினாமி பெயர்களில் டெண்டர்களை எடுக்கிறார்கள். ஆளுங்கட்சியான த.வெ.க-வினரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. `இதில் உள்குத்து எதுவும் இருக்குமோ...’ என த.வெ.க-வினரே சந்தேகம் கிளப்புகின்றனர்” என்று சொல்லிவிட்டு, சிறகுகளை விரித்தார்.