📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 10:03 AM

மிஸ்டர் கழுகு: “முதல்வர் மட்டுமே படிக்க வேண்டும்!”

மிஸ்டர் கழுகு: “முதல்வர் மட்டுமே படிக்க வேண்டும்!”

மிஸ்டர் கழுகு: “முதல்வர் மட்டுமே படிக்க வேண்டும்!" - அடம்பிடிக்கும் உளவுப்புள்ளி...

ஈகோ காட்டும் அதிகார மையங்கள்!

‘ஞானேஷ் குமார் பதவி விலகும்வரை போராட்டம் ஓயாதுபோல..!’ என எக்ஸ் தளப் பதிவுகளை ஸ்க்ரோல் செய்தவாறே அலுவலகத்துக்கு என்ட்ரி கொடுத்தார் கழுகார். அவருக்கு செம்பருத்தி டீயும், உஸ்மானியா பிஸ்கட்டும் கொடுத்தோம். சுவைத்துவிட்டு செய்திகளுக்குள் நுழைந்தார்.

“எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில், காக்ரோச் ஜனதா பார்ட்டியை ஓரங்கட்டிவிட்டு நாம் ஸ்கோர் செய்துவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், எம்.பி பிரியங்கா காந்தியும் டெல்லியில் சீறிக்கொண்டிருக்கிறார்கள். ‘மாணவர் அமைப்புகள் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே போனால் நமக்கு வேலையில்லாமல் போய்விடும்’ என்று கணக்கு போடும் `இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கோதாவில் குதித்திருக்கிறார்கள். ஆனால், காக்ரோச் ஜனதா பார்ட்டி புது வியூகத்தைக் கையிலெடுத்திருக்கிறதாம்.”

“என்ன வியூகம்?”

“போராட்டக் களத்திலிருந்த காங்கிரஸ் எம்.பி ஒருவர் திடீரென ரெஸ்டாரன்ட்டுக்குள் புகுந்து தலைமறைவானதைச் சுட்டிக்காட்டி, ` ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பி-க்கள் அடையாளப் போராட்டத்தை நடத்திவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். நாம் தொடர்ந்து போராட வேண்டும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் சி.ஜே.பி மாற்றியது என்று பெயர் வாங்க வேண்டும்’ என்பதில் தீவிரமாக இருக்கிறார்களாம். அதைச் சாத்தியப்படுத்திவிட்டால் `இந்தியா’ கூட்டணிக்குப் பெரும் பின்னடைவாகிவிடும், மூன்றாவதாக ஓர் அணியைக் கட்டமைத்து விடலாம் என்பது காக்ரோச் தலைவர்களின் வியூகக் கணக்கு. அதை அர்த்தத்தோடு தி.மு.க-வும் ரசிக்கிறது.”

‘‘இருக்கத்தானே செய்யும்?’’

‘‘காக்ரோச் ஜனதா பார்ட்டியின் வியூகக் கணக்கோடும், தங்கள் கருத்தோடும் அந்தக் கட்சியினர் ஒத்துப்போவதில்லை என நினைக்கும் காங்கிரஸ் தலைமை, போட்டி வியூகம் வகுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். `அக்னிவீர் ஜனதா கட்சி’ என்ற பெயரில், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றோரை வைத்து புதிய கட்சி தொடங்கி, சி.ஜே.பி கட்சியைப்போலவே இயங்கச் செய்ய வைக்கும் முயற்சியில் இருக்கின்றனராம். எப்படியோ, ஆளாளுக்கு மோதிக்கொண்டு, எதிர்க்கட்சிகள் பலம் குன்றிப்போகட்டும் என, எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டிருக்கிறதாம் பா.ஜ.க தலைமை...’’

“ம்ம்.. அதிகார மையங்களுக்கு இடையே கோட்டையில் ஏதோ ஈகோ மோதல் வெடித்துவிட்டதாமே?”

“ஆமாம். உளவுத்துறையிலிருந்து நாளொன்றுக்கு மூன்று முறை டி.எஸ்.ஆர் ரிப்போர்ட் முதலமைச்சருக்குக் கொடுப்பது வழக்கம். அவற்றைப் படிப்பதற்கு முதல்வர் விஜய் ஆர்வம் காட்டுவதில்லையாம். ‘எதுவாக இருந்தாலும் வியூகப்புள்ளியிடம் கொடுங்கள்’ என உதறிவிடுகிறாராம். முதல்வருக்கு மட்டுமே வழங்க வேண்டிய டி.எஸ்.ஆர் ரிப்போர்ட்டை, வியூகப்புள்ளியுடன் சேர்த்து இரண்டு பவர்ஃபுல் மாண்புமிகுக்களும் தினசரி படித்துவருவதால், ‘ஷாக்’ ஆகிவிட்டது அதிகாரிகள் தரப்பு. ‘முதல்வர் மட்டுமே படிக்க வேண்டும்’ என உளவுத்துறை உச்சப்புள்ளி அடம்பிடிப்பதால், அதிகார மையங்களுக்கு இடையே ஈகோ மோதல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.”

“சில மாண்புமிகுக்கள் இந்த ஆட்சியைக் குழிக்குள் தள்ளிவிடுவார்கள்போல... தலைநகருக்கு அருகேயுள்ள ‘தொழிற்சாலை’ தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரானவருக்கு, கட்சியின் மகளிரணி நிர்வாகிகளுக்குத் தனியே வீடு எடுத்துக் கொடுக்கும் பழக்கமுண்டு. தேர்தலுக்கு முன்பாக ரசிகர் மன்றப் பெண் நிர்வாகிக்குத் தனியாக வீடு எடுத்துக் கொடுத்தவர், அமைச்சரானவுடன் மகளிரணியின் வேறொரு நிர்வாகிக்கு வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறாராம். அங்கேயே பல நாள்கள் தங்கியும்விடுகிறாராம். இதனால் ரசிகர் மன்றப் பெண் நிர்வாகி கடும் டென்ஷனாகி, மகளிரணி நிர்வாகியையும் அமைச்சரையும் ஒன்றாக போனில் அழைத்துக் காய்ச்சியிருக்கிறார். ‘இந்த விவகாரம் ஆடியோவாக எப்போது ‘லீக்’ ஆகுமோ?’ என்று பதறிப்போயிருக்கிறார்கள் லோக்கல் த.வெ.க-வினர்.”

“கஷ்டகாலம்... ரீல்ஸ் மாண்புமிகு மீதும் ஏதோ புகார் பறந்திருக்கிறதாமே?”

“அவர்மீது புகாருக்கா பஞ்சம்... ‘பட்டாசு லைசென்ஸ் பெறுவதற்கு எந்தப் பணமும் தர வேண்டாம். அதிகாரிகள் பணம் கேட்டால், எனக்கு போன் செய்யுங்கள்’ என்று சமீபத்தில் படாடோபமாக அறிவித்தார் ‘ரீல்ஸ்’ மாண்புமிகு. அவர் அறிவித்த பிறகுதான், `ஆய்வு’ என்ற பெயரில் பட்டாசுத் தொழிற்சாலைகளிடம் நேரடியாகவே பணம் கேட்டு நச்சரிக்கிறார்களாம் பல அதிகாரிகள். அதிர்ந்துபோன பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள், அமைச்சருக்கு போன் செய்திருக்கிறார்கள். வழக்கம்போல அவர் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. ‘பேசாமல் அதிகாரிகளுக்கே காசைக் கொடுத்துவிட்டு, தீபாவளி நேரத்தில் தொழிலைப் பார்க்கலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம் பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள்.”

“அமைச்சர்களின் உதவியாளர்களும் சும்மா இருப்பதில்லையாமே?”

“ஒரேயோர் உதாரணம் சொல்கிறேன். ‘பசுமை’ துறையில், உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் துணை இயக்குநர்களாகப் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் தி.மு.க காலத்திலிருந்தே தொடர்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே பெரிய உர நிறுவனம், தன்னுடைய 52 ‘பசுமை’ பொருள்களை விற்பனை செய்ய அனுமதி கேட்டிருக்கிறது. ‘50 லட்டுகள் கொடுத்தால் கையெழுத்து போடுகிறோம்’ என்று, கடந்த ஒரு மாதமாக அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார்களாம் அந்த இரண்டு அதிகாரிகளும். அதுபோக, எந்த லைசென்ஸுக்குக் கையெழுத்து போடுவதாக இருந்தாலும், ஆளுக்கு ஒரு லட்டு கொடுத்தாக வேண்டுமாம். அந்தத் துறைக்குள் புரையோடிப்போயிருக்கும் இது போன்ற அதிகாரிகளைப் பாதுகாப்பதே, அமைச்சரின் ‘ஐஸ்வர்ய’ உதவியாளர்தான்.”

“பெயரை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல இருக்கிறதே?”

“கடந்த ஆட்சியில், துறையைத் தன்வசம் வைத்திருந்த கடலூர்க்காரருக்கு உதவியாளராக இருந்தவர்தான் அந்த ‘ஐஸ்வர்ய’ பிரமுகர். ஓய்வுபெற்ற பிறகு இப்போதைய அமைச்சருடன் எப்படியோ ஒட்டிக்கொண்டார். லஞ்ச அதிகாரிகளிடமிருந்து மாதாந்தர மாமூல் வசூலிக்கும் அந்த உதவியாளர், தேனி மாவட்டத்தில் ஒரு பினாமியை வைத்திருக்கிறார். ‘ரஷ்யத் தலைவர்’ பெயர்கொண்ட அந்த பினாமியின் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் டெண்டர்களிலும் புகுந்து விளையாடுகிறாராம். யார் அவரை முறைத்தாலும், ‘நான் மட்டுமா சம்பாதிக்கிறேன்... அமைச்சருக்கும்தானே பங்கு போகுது...’ என்று வாயை அடைத்துவிடுவதால், ‘ஐஸ்வர்ய’ உதவியாளரின் ஆட்டம் துறைக்குள் தாண்டவமாடுகிறது” என்ற கழுகாருக்கு, அசோகா அல்வா கொடுத்தோம். சுவைத்துக்கொண்டே செய்திகளைத் தொடர்ந்தார்.

“போக்சோ வழக்கில் கைதான ‘ஜெம்’ வீரமணியின் வழக்கைச் சரியாக விசாரிக்கவில்லை என உதவி கமிஷனர் யாஸ்மின் டீமின் மீது சர்ச்சைகள் எழுந்தன. அவர்களைக் கைதுசெய்வது குறித்துச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறது சிறப்பு புலனாய்வுக்குழு. இந்தச் சூழலில்தான் விபசாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய காவலர்கள் ராஜ்குமார், மலர்விழி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகன் பிரகாஷ், வீரமணியின் சகோதரர் ஆசைத்தம்பி ஆகியோர்மீது முறையான நடவடிக்கை எடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறதாம்.”

“கூட்டணிக் கட்சித் தலைவர்கள்மீது முதல்வர் விஜய் ஏக வருத்தத்தில் இருக்கிறாராமே!”

“ம்ம்... ‘ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மட்டும்தான் நமக்காகப் பேசுகிறார். மற்றவர்கள் நமக்காகப் பேசுவதில்லையே...’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப் பட்டிருக்கிறார். அப்போது, பா.ம.க-வின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் விசாரித்தாராம். ‘துணை முதல்வர் பதவியைக் கொடுக்க முன்வந்தால் அமைச்சரவையில் இடம்பெறுவோம்’ என்று பா.ம.க தரப்பில் சொன்னதாக, முதல்வரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம் முதல்வர்.”

“அது சரி... பா.ம.க நிர்வாகக்குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது?”

“பா.ம.க-விலிருந்து ஒருவர், வன்னியர் சங்கத்திலிருந்து ஒருவர் என்று தொகுதிக்கு இரண்டு மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடிவெடுத்திருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி. சென்னையில் 16 தொகுதிகளுக்கு, 32 மாவட்டச் செயலாளர்களை நியமித்துவிட்டார். இவர்களில் யார் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, அவர்களையே தொகுதியின் வேட்பாளராக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்” என்று சொல்லிவிட்டு, சிறகை உலுப்பிய கழுகார்,

“ஆவின் பாலகங்களில் பால் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்திருக்கிறதாம்... உமது நிருபரை விசாரிக்கச் சொல்லும்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.