வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 18 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்கலாம் என்றும், அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியிருப்பதாவது:- எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இளம் வாக்காளர்கள்
இதன்படி, வரும் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக, தேவைக்கேற்ப மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் வரும் சனிக்கிழமை நடத்தப்படும். முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்படும்.
. சிறப்பு நடவடிக்கை
தேர்தல் அதிகாரியின் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம் தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:- சென்னையில் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய உள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.
எனவே, வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் சிறப்பு மிகாமில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.