📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 25, 2026 07:03 AM

கம்மசமுத்திரத்தில் களைகட்டும் கால்நடைச் சந்தை... சுங்கக் கட்டணம் இல்லை, தரகர்கள் இல்லை!

கம்மசமுத்திரத்தில் களைகட்டும் கால்நடைச் சந்தை... சுங்கக் கட்டணம் இல்லை, தரகர்கள் இல்லை!

கம்மசமுத்திரத்தில் களைகட்டும் கால்நடைச் சந்தை... சுங்கக் கட்டணம் இல்லை, தரகர்கள் இல்லை!

கால்நடைச் சந்தைகளுக்குப் புகழ்பெற்ற வேலூர் மாவட்டத்தில், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள `கம்மசமுத்திரம் சந்தை' விவசாயிகள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. மண்வாசனை மணக்க, வாரம்தோறும் வியாழக்கிழமை கூடும் இந்தச் சந்தையில் கால்நடைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் களைகட்டத் தொடங்கியுள்ளது.

கால்நடைச் சந்தை என்பது வெறும் வியாபாரக் களம் மட்டுமல்ல... விவசாயிகளின் உழைப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் சங்கமம். வாழ்வியல் சார்ந்த பண்பாட்டுத் திருவிழா. அந்த வகையில்தான் வேலூர் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கம்ம சமுத்திரம் கால்நடைச் சந்தையும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்திலுள்ள கிராமம்தான் கம்ம சமுத்திரம். வேளாண் பெருங்குடி மக்கள் பரவலாக வாழும் இந்தக் கிராமம், வேலூர் நகரத்திலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக் கோயில் வளாக மைதானத்தில் தான் வாரம் தோறும் கால்நடைச் சந்தை கூடுகிறது.

அதிக அளவில் ஆடுகள்!

கடந்த ஜூன் 11-ம் தேதி, இங்கு முதல் முறையாகச் சந்தை கூடியது. சமூக வலை தளங்கள் வாயிலாகச் சந்தை தொடக்க விழாவை ஊரிலுள்ள இளைஞர்கள் அறிவித்திருந்தார்கள். `முதலில், மாட்டுச் சந்தையாகத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், மாடுகளைவிட ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்ததால், பொதுவான பெயரில் கால்நடைச் சந்தை எனப் பெயர் சூட்டி அறிவிப்பு வெளியிட்டு அழைப்பு விடுத்தோம். நாங்கள் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய அளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் கூடியது’ என்கிறார்கள், இங்குள்ள இளைஞர்கள்.

காளைவிடும் திருவிழா!

திரௌபதி அம்மன் கோயில் மைதானத்துக் கும் கால்நடைகளுக்கும் இடையேயான உறவு என்பது, தற்போது புதிதாக ஏற்பட்டதல்ல. நீண்ட நெடுங்காலமாக இங்கு காளை விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கிராம மக்கள் ஒன்றுகூடி இந்தச் சந்தையை முன்னெடுத்து நடத்துவதால், தரகர்களின் ஆதிக்கம் இல்லை. இங்கு கால்நடைகளை விற்பனை செய்ய வருபவர்களிடம் சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

கூடூர் ஆடுகள்… பூரணிக் காளைகள்!

வியாழன்தோறும் காலை 5 மணிக்கெல்லாம் சந்தை களைகட்டத் தொடங்கிவிடுகிறது. மினுமினுப்பான தோற்றத்துடன் ஆந்திராவின் கூடூர் நாட்டின ஆடுகள் தொடங்கி, தமிழ்நாட்டின் பாரம்பர்ய இனங்களான கன்னி, கொடி, சேலம் கருப்பு உள்ளிட்ட பல வகையான ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தரமான நாட்டு மாடுகள் மற்றும் கலப்பினக் கறவை மாடுகளும் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. காளை விடும் போட்டிகளுக்காக மிகவும் விரும்பி வளர்க்கப்படும் `பூரணி’ ரகக் காளைக் கன்றுகளும் சந்தையில் கவனம் ஈர்க்கின்றன. நாட்டுச் சேவல்களும் அதிகம் விற்பனைக்கு வருவதால் வளர்ப்புக்காகவும், இறைச்சிக்காகவும் பலர் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.

சந்தைக்கு வருவதே சந்தோஷம்தான்!

ஆற்காடு அருகேயுள்ள காவனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ராஜேந்திரன் நாட்டுரக ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தார்.

அவரிடம் பேசியபோது, ``நான் இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். ஓய்வுக்குப் பிறகு எனக்குப் பிடித்தமான ஆடு, மாடு வியாபாரத்தைச் செய்து வருகிறேன். ஞாயிற்றுக் கிழமைதோறும் நடைபெறும் தளவாய்குளம் மாட்டுச் சந்தை, திங்கட்கிழமைதோறும் நடைபெறும்கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தை மற்றும் போளூர் ஆட்டுச் சந்தை, வேலூர் அருகேயுள்ள பொய்கை பகுதியில் செவ்வாய்க் கிழமைதோறும் நடைபெறும் நடைபெறும் மாட்டுச் சந்தை, வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் ராணிப்பேட்டை ஆட்டுச் சந்தை என வாரம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் இருப்பேன். காரணம், கால்நடை வளர்ப்பு மற்றும் வணிகத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம்.

இந்தத் தொழில் எனக்கு ஓரளவுக்கு நல்ல வருமானத் தையும், மிகுந்த மன நிம்மதி யையும் அளிக்கிறது. உழவர்களுடன் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. கம்மசமுத்திரம் கிராமத்தில் வியாழக்கிழமைச் சந்தை தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் வந்து கொண்டிருக் கிறேன். பெட்டை ஆடுகள் மற்றும் குட்டிகளை வளர்த்தும், மற்றவர் களிடமிருந்து வாங்கி வந்தும் இங்கு விற்பனை செய்கிறேன். இரு குட்டிகள் ஈன்ற பெட்டை ஆடு 25,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. குட்டிகளை 4,000 ரூபாய்க்கும் வாங்கிச் செல்கிறார்கள். 100, 200 முன்பின் இருந்தாலும் சந்தைக்கு வருவதே பெரிய சந்தோஷம்தான்’’ என்றார்.

படிப்புச் செலவுக்குப் பணம்!

ஆரணி, அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற இளைஞர் ஆட்டுக் குட்டிகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தார். அவரிடம் பேசியபோது, ``நான் பி.எஸ்.சி மைக்ரோபயலாஜி படித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுக்காகத் தயாராகி வருகிறேன். தொடர்ந்து ஆட்டுக் குட்டிகளை மட்டும் விற்பனைக்குக் கொண்டு வருகிறேன். முன்பெல்லாம், அவலூர்பேட்டை சந்தைக் குப் போவேன். இப்போது, அருகிலேயே கம்ம சமுத்திரத்தில் சந்தை கூடுவதால் இங்கே வருகிறேன். ஐந்தாறு குட்டிகளை எடுத்து வந்தாலும் ஒரு மணி நேரத்துக் குள் விற்பனையாகி விடுகிறது. கிடாக் குட்டிக்கு 5,000 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதில் கிடைக்கும் வருமானம் என் படிப்புச் செலவுக்கு உதவியாக இருக்கிறது’’ என்றார்.

சுங்கக் கட்டணம் இல்லாததால்கூடுதல் லாபம்!

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த நாராயணசாமி கூடூர் ரக ஆடுகளைக் கொண்டுவந்திருந்தார். அவர், ``என் உறவினர் பொய்கை பகுதியில் வசிக்கிறார். இதனால், அவருடன் சேர்ந்து பொய்கை மாட்டுச் சந்தையில் ஆடுகளை விற்பனை செய்து வருகிறேன். ஆந்திரா விலிருந்து கூடூர் ஆடுகளை மந்தையாக வாங்கி வந்து திங்கட்கிழமை கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையிலும், செவ்வாய்க்கிழமை பொய்கைச் சந்தையிலும் விற்பனைக்குக் கொண்டு செல்வோம். வியாழக்கிழமைதோறும் கம்மசமுத்திரத்தில் நடைபெறும் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்கிறோம்.

பிற பகுதிகளில் உள்ள சந்தைகளை விடவும் இங்கு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. மற்ற சந்தைகளில் ஒரு குட்டிக்குக் கூட 120 ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதுதவிர வண்டி வாடகை, டோல்கேட் கட்டணம், இடையிடையே போலீஸ் மாமூல் என எவ்வளவோ பணம் கரைந்துவிடுகிறது. இது எல்லாம்போக ஒரு ஆட்டுக்குட்டி மீது 200 அல்லது 300 ரூபாய் தான் லாபம் கிடைக்கும். கம்மசமுத்திரம் சந்தையில் சுங்கக் கட்டணம் கேட்கப் படாததால் எங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கிறது’’ என்றார்.

கம்மசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனிடம் பேசினோம். ``கம்ம சமுத்திரத்தைச் சுற்றிலும் ஒன்பது கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள விவசாயிகள் தங்களின் கால்நடைகளைத் தொலைதூரம் கொண்டு சென்று வியாபாரம் செய்ய முடிவதில்லை. இதனால்தான் நாங்களே புதிதாகக் கால்நடைச் சந்தையை ஆரம்பித் துள்ளோம். ஊர் மக்களுடன் சேர்ந்து இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர். சந்தைக்கு வருவோருக்கான குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப் பட்டுள்ளன.

சந்தையின் வளர்ச்சி, கிராமத்தின் வளர்ச்சி!

வேலூர், ஆரணி, ஆற்காடு எனச் சுற்றுவட்டாரத்திலிருந்து சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை வாராவாரம் அதிகரிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி யாக இருக்கிறது. எங்களின் நோக்கம் நிறைவேறியுள்ளதாகவே கருதுகிறோம். `குட்டி யானை’ வாகனமும் கிடைக்கிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் எங்கள் சந்தைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினாலும், சந்தை வளர்ச்சிக்கான ஆதரவை மேன்மேலும் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், 90 சதவிகிதத்துக்கு அதிகமாக ஆடுகளின் வரத்து மட்டுமே இருக்கிறது. மாடுகளின் வரத்து குறைவாக இருப்பதால், மாடுகளை நல்ல விலையில் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் இங்கு வரலாம். மாடுகளை நல்ல விலைக்குக் கொடுத்து வாங்க நிறைய பேர் வருகிறார்கள். சுற்று வட்டாரக் கிராமங்களில் விவசாயிகள் பலரும் கறவை மாடுகளை எதிர்பார்க்கிறார்கள். சந்தையின் வளர்ச்சி, எங்கள் கிராமத்தின் வளர்ச்சியாக இருக்கும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

ஆவிபறக்க இட்லி... சுவையான கேழ்வரகுக்கூழ்!

கம்மசமுத்திரம் என்பது, நெடுஞ் சாலையிலிருந்து உள்ளடங்கிய குக்கிராமம். எனவே, கால்நடைகளை வாங்க, விற்க வருவோர் பசியாற ஹோட்டல்கள் இருக்குமா எனக் கவலைப்பட வேண்டியதில்லை. கம்ம சமுத்திரம் கிராம மக்கள் அந்தக் குறை யைப் போக்கியுள்ளார்கள். சந்தை மைதானத்திலேயே ஆவிபறக்க இட்லி, வடை, பூரி ஆகியவை கிடைக்கின்றன. முப்பது ரூபாய்க்குத் திருப்தியாகச் சாப்பிடலாம். ஒரு செம்பு கேழ்வரகுக் கூழ், ஊறுகாய் தொக்குடன் 20 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.