700 ஆண்டுகள் பழமையான கம்பணன் காலத்து கல்வெட்டு
700 ஆண்டுகள் பழமையான கம்பணன் காலத்து கல்வெட்டு - வெளிவந்த வணிகக் குழுக்களின் பெயர்கள்!
சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய ஏரியூர் மலைப்பகுதியில் நிலவிய நீர்ப்பாசன அமைப்பு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் வணிக குழுக்களின் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள இந்த கல்வெட்டு முக்கிய வரலாற்றுச் சான்றாக அமைகிறது.
Published : September 21, 2026 at 1:32 PM IST
சிவகங்கை: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கம்பணன் காலத்து கல்வெட்டு ஒன்றை திருப்பத்தூர் அருகே ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருப்பத்தூரை அடுத்த ஏரியூர் மலைப்பகுதியில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு கம்பணனின் அலுவலர் மற்றும் அக்கால வணிகக் குழுவினருடன் தொடர்புடைய முக்கிய வரலாற்றுத் தகவல்கள் அக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியத் தொல்லியல் துறை அலுவலர் முத்துக்குமார், ஏரியூர் மலைப்பகுதியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டு ஒன்றைக் கண்டதாக தெரிவித்த தகவலின் அடிப்படையில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தொல்லியல் மாணவர் கருணாகரன், சோழபுரம் பாலசுந்தரம் மற்றும் ஏரியூரைச் சேர்ந்த சஞ்சீவிநாதன் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில், உலகம்பட்டி பகுதியிலிருந்து மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள காட்டுப்பகுதியில் பழமையான கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா கூறியதாவது, கல்வெட்டு “ஸ்வஸ்தி ஸ்ரீ” என்ற மங்களச் சொல்லுடன் தொடங்குகிறது. இதில் “வடுகக் கெம்பனன்” எனும் பெயர் இடம்பெற்றுள்ளதால், இது தெலுங்கு கம்பணனனை குறிப்பதாக இருக்கலாம்.
மேலும், “முனையத் தரையர்” என்பது சோழர், பாண்டியர் காலத்தில் அரசு அலுவலர்களை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில், தெலுங்கு மன்னனான கம்பணனின் அலுவலரால் இக்கல்வெட்டு வழங்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் “பருஷை” என்ற சொல், சமஸ்கிருதத்தின் “பரிஷத்” என்ற சொல்லின் தமிழ் திரிபாகும். இதற்கு பெருமக்கள் சபை அல்லது நிர்வாகக் குழு என்று பொருள் கொள்ளலாம்.
கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், அறக்கட்டளைகள் மற்றும் பிற வளங்களை நிர்வகிக்கும் சபையினரைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அத்தகைய சபையினரால் நிர்வகிக்கப்பட்ட நல்லூர் குளத்துக்கு தண்ணீர் பாயும் கால்வாய்க்கு “ஆயிரத்தைந்நூற்றுவன்” என்ற பெயர் சூட்டப்பட்ட தகவலை இந்தக் கல்வெட்டு பதிவு செய்கிறது" என தெரிவித்தார்.
“ஆயிரத்தைந்நூற்றுவர்” என்றால் என்ன?
தொடர்ந்து, ஆயிரத்தைந்நூற்றுவர் குறித்து விளக்கம் அளித்த அவர், "கல்வெட்டில் இடம்பெற்றுள்ள “ஆயிரத்தைந்நூற்றுவன்” என்ற பெயர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இடைக்காலத் தமிழகத்தில் “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்”, “நானாதேசிகள்” போன்ற பெயர்களில் வணிகக் குழுக்கள் இயங்கி வந்தன. வணிகர்கள் பல்வேறு நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் சென்று வணிகம் மேற்கொண்டதை வரலாற்றுச் சான்றுகள் பதிவு செய்கின்றன.
அத்தகைய வணிகக் குழுவின் பெயர் ஒரு கால்வாய்க்குச் சூட்டப்பட்டிருப்பது, அந்தப் பகுதியின் நீர்ப்பாசனம், வணிகக் குழுக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகுறித்த புதிய தகவலையே இந்த கல்வெட்டு வழங்குகிறது.
கல்வெட்டு வாசிப்பு
கல்வெட்டில் இடம்பெற்றுள்ள வரிகள்
1. ஸ்வஸ்தி ஸ்ரீ வடுக
2. கெம்பனான முனை
3. யதரை மாலை பரு
4. ஷை நல்லூர்க்
5. குளத்துக்குப் பா
6. ய்கிற இக்காலின்
7. பெர் ஆயிரத்தை
இதன் பொருள், தெலுங்கு கம்பணனின் அலுவலரான முனையத் தரையர் மற்றும் மலைப்பகுதியை ஒட்டிய பருஷை சபையினரால் நிர்வகிக்கப்பட்ட நல்லூர் குளத்துக்குச் செல்லும் கால்வாய்க்கு “ஆயிரத்தைந்நூற்றுவன்” என்ற பெயர் சூட்டப்பட்டதாக விளக்கப்படுகிறது. மேலும், கல்வெட்டில் “மாலை” எனப் பதிவாகியுள்ள சொல், உண்மையில் “மலை” என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். “மலை பருஷை நல்லூர்” என்ற பொருத்தமான வாசிப்பு கிடைப்பதால், இவ்வாறு இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியூர் மலைப்பகுதியில் நிலவிய நீர்ப்பாசன அமைப்பு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் வணிக குழுக்களின் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள இந்த கல்வெட்டு முக்கிய வரலாற்றுச் சான்றாக அமைகிறது" என கூறினார்.