📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 07, 2026 04:00 AM

கலைஞர்கள் சங்கமித்த தமிழ் நாடக விழா

கலைஞர்கள் சங்கமித்த தமிழ் நாடக விழா

நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள் சிங்கப்பூர்க் கலைஞர்களுடன் சங்கமிக்கும் தளமாக அகம் நாடகக் குழுவின் ‘நாடகமிக்’ அனைத்துலகத் தமிழ் நாடக விழா திகழ்ந்தது.

ஆகஸ்ட் 20 முதல் 30 வரை எட்டு நாடகங்கள், ஐந்து பயிலரங்குகள், ஒரு கருத்தரங்கு எனத் தமிழ் நாடக ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது அவ்விழா.

விழாவில் இடம்பெற்ற அனைத்து அங்கங்களின் தகவல்களையும் விமர்சனங்களையும் இக்கட்டுரை விவரிக்கிறது.

ஆசைகளை நிறைவேற்றி, கொடூர சாபங்களை வழங்கும் ஒரு குரங்குப் பாதத்தைப் பற்றிய ஆங்கிலச் சிறுகதையைத் தழுவி, அகம் நாடகக் குழு வழங்கிய ‘கைவரிசை’ நாடகம், பார்வையாளர்களை வெகுவாகச் சிரிக்க வைத்தது.

இந்நாடகம் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் மொத்தம் மூன்று முறை மேடையேற்றப்பட்டது.

1930களில் ‘மலேசிய நீரிணை அருங்காட்சியகத்தில்’ (Straits of Malaya Museum) நடப்பதாக அமைக்கப்பட்ட இந்த வரலாற்றுப் புனைவு நாடகம், ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்திலுள்ள ‘தி பிளேடன்’ மேடைக்குப் பொருத்தமான பின்னணியைக் கொண்டிருந்தது.

குரங்குப் பாதத்தின் மந்திர சக்தியை மையமாகக் கொண்டு தொடங்கிய கதை, இறுதியில் அதனை யார் திருடியது எனும் தேடலாக மாறியது. அதன் முடிவு மனநிறைவான திருப்பத்தை அளித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருப்பினும், ரசிகர்களைக் கவர்ந்தவை பல. ஆடை வடிவமைப்பு சிறப்பான குறிப்பிடத் தகுந்தது. பதற்றத்தை அதிகரிக்க ஒளி, ஒலி வடிவமைப்பு நன்கு பங்காற்றியது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அரைகுறைத் தமிழில் பேசிய விக்டர் செபாஸ்டியன் கதாபாத்திரத்தில் நடித்த ஷேய்க் யாசின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். எஸ்.ஆர்.எஸ்.மகேஷ்வரன் ஆங்கிலம் தெரியாத, அச்ச குணமுள்ள பாதுகாவலராகத் தேர்ந்த நடிப்பை வழங்கினார். கார்ல்ஸ் கார்த்திகேயன், அகன்ற கண்கள், பாதி மழிக்கப்பட்ட தலை, ஊன்றுகோல் ஆதரவுடன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

நாடகத்தின் இரண்டாம் பாதியில் வேகம் குறைந்திருந்தாலும், முதல் பாதி நகைச்சுவைப் பிரியர்களை மகிழ்வித்தது.

குரு ஆஃப் சாய்

ஒரே நடிகர் 17 கதாபாத்திரங்களில் தோன்றி, 80 நிமிடங்களுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். எளிமையான கதை, மேடை வடிவமைப்பு, ஒலி வழங்க ஒற்றை இசைக் கலைஞர், அட்டகாசமான ஒளி வடிவமைப்பு என குறைந்த அம்சங்களைக் கொண்டிருந்தாலும் அற்புதமான நாடகமாக அமைந்தது.

நாடகத்தில் தமது அசாத்திய நடிப்பு திறமையை வெளிக்காட்டிய ஜேக்கப் ராஜன், நாடகத்தை எழுதியவர்களிலும் ஒருவர்.

‘தி டேல் ஆஃப் புன்ச்கின்’ என்ற பழங்காலத்து இந்திய கதையைத் தழுவி, சமகாலத்தில் பெங்களூரு ரயில் நிலையத்தில் குடிசா என்ற தேநீர் விற்பனையாளரைக் கதையின் நாயகனாகக் கொண்டு கதை வடிவமைக்கப்பட்டிருந்தது.

கைவிடப்பட்ட சகோதரிகள் எழுவர் ஒருநாள் அவரது கடைக்கு வருகின்றனர். அவர்களின் அற்புதமான பாடலால் ஈர்க்கப்படும் குடிசா, அவர்களுக்குப் பாதுகாப்பான தந்தையைப் போல மாறுகிறார். அவர்களில் ஒரு பெண் காதலில் விழுவதும், அதனைத் தொடர்ந்து நடக்கும் காதல், ஏமாற்றம், பொறாமை, எதிர்பாராத சம்பவங்களும் கதையை விறுவிறுப்பாக நகர்த்தின.

விழாவில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் இந்நாடகம் பலரின் பாராட்டை வென்றது.

வீழ்வேன் என்று நினைத்தாயோ

தடுமாறும் மனத்திற்கும் தெளிந்த சிந்தனைக்கும் இடையே அரங்கேறும் உன்னத உரையாடலின்வழி, புற்றுநோயின் பிடியில் சிக்கிய சாந்தாராம் (ஸ்ரீவத்சன்) விடியலை நோக்கி பயணம் செய்வதே ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’.

ஸ்ரீவத்சன் எழுதி இயக்கிய டம்மீஸ் டிராமா குழுவின் (இந்தியா) 100 நிமிட நாடகம், ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் ஆர்ட்ஸ் ஹவுசிலுள்ள பிளே டென்னில் அரங்கேறியது.

புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்த சாந்தாராம், குடும்பத்தினரிடமிருந்து மறைத்து, சிகிச்சையை மறுத்து, எஞ்சியிருக்கும் நாள்களில் தனக்குப் பிடித்தபடி வாழ முடிவுசெய்கிறார். தனது விருப்பப் பட்டியலிலுள்ள ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் அவர், தனது முடிவுகள் குறித்து நண்பன் ராகவனுடன் (பூவராகன்) உரையாடுகிறார்.

ஆனால் இறுதியில், தானே உருவாக்கிக்கொண்ட, தனது தெளிந்த சிந்தனையின் பிம்பமே ராகவன் என்று அவர் கண்டறிவது நாடகத்தின் முக்கியத் திருப்பமாக அமைந்தது.

வாழ்க்கையின் பொருள், தனிமனித சுதந்திரம், மரணம் போன்ற ஆழமான தத்துவங்களை நகைச்சுவையுடன் கோர்த்த இந்நாடகத்தின் பாணி பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்ததோடு கைதட்டல்களையும் குவித்தது.

தன் கணவன் ஏதோ ஓர் இன்னலில் உழல்வதை உணர்ந்து வேதனையுற்ற வைஷ்ணவியின் (காஞ்சனா) நடிப்பு மனத்தை நெகிழச் செய்தது. சாந்தாராமின் வலியைத் தன் இயல்பான நடிப்பின்மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்தியது பாராட்டத்தக்கது.

எழுத்தையும் நடிப்பையும் மையமாகக் கொண்ட ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

குக்ஸ் - சன்னி சைட் அப்

சமையலறை ஒன்றில் தலைமைச் சமையற்காரர், மூன்று இளைய சமையற்காரர்கள், ஒரு துப்பரவுப் பணியாளர் ஆகியோருக்கு இடையே நடைபெறும் நகைச்சுவை கலாட்டாவை மையமாகக் கொண்டிருந்த தி லிட்டில் தியேட்டரின் (இந்தியா) இந்த நாடகம், ஆகஸ்ட் 25, 26ஆம் தேதிகளில் அகம் நாடகக்குழுவின் ‘பிளேக் பாக்ஸ்’ அரங்கில் மேடையேறியது.

கோமாளித்தனம் (கிலவ்னிங்) எனும் உத்தியைப் பயன்படுத்திய நாடகம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை நடிப்பு, உற்சாகமான நடனம், அட்டகாசமான சண்டை காட்சி என பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது.

உலகைக் காப்பாற்ற உணவு ஒன்றைச் சமைக்க முனைந்து, அம்முயற்சியில் தோல்வியுற்று, சுனாமியில் புகழ்பெற்ற உணவு செய்முறைப் புத்தகத்தை இழந்து, அதனை மீட்டெடுக்கும் முயற்சி நாடகத்தின் கருவாக இடம்பெற்றது.

அவ்வங்கத்தில் கணவாய், திமிங்கிலம் போன்ற விலங்குகளை மேடைப் பொருள்கள்வழி உயிரோட்டத்துடன் கொண்டுவந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. பார்வையாளர்களுடனான தொடர்பு அங்கங்களும் அனைவரையும் மகிழ்வித்தன.

நாடகத்தின் நடிகர்கள் அனைவரும் திறன்மிகு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் துப்புரவுப் பணியாளராக இட்லி கதாப்பாத்திரத்தில் நடித்த பிரவீன் குணசேகரனின் நடிப்பு நினைவில் நின்றது.

ஒரு முடிவு ஓர் உலகம்

ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆர்ட்ஸ் ஹவுசின் பிளே டென் அரங்கில் நடந்த நாடகத்தில் ரசிகர்களுடனான கேள்வி-பதில் அங்கம் ஒன்றும் இடம்பெற்றது.

கர்ணன், துரியோதனன், குந்தி ஆகிய கதாபாத்திரங்களிடம் பார்வையாளர்கள் அவ்வங்கத்தில் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.

குந்தி தன்னலவாதியா, துரியோதனின் நட்பும் அன்பும் உண்மையா, துரியோதனின் பக்கம் கர்ணன் நின்றது சரியா எனப் பார்வையாளர்கள் கேள்வி கணைகளைச் சரமாரியாகத் தொடுத்தனர்.

நடிகர்கள் தங்களால் இயன்ற அளவிற்குக் கதாபாத்திரங்களாகவே கேள்விகளுக்குப் பதிலளிக்க முயன்றனர். பானுமதியாக நடித்த கிரிஷ்மிதா ஷிவ் ராம் அவ்வங்கத்தைச் சிறப்பாக வழிநடத்தினார்.

கதாபாத்திரங்களின் ஒப்பனை மாறுபட்டு, சிறப்பாக விளங்கியது. மேடைப் பொருள்களும் நாடகத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தன.

துரியோதனனாக நடித்த சங்கீதா புஷ்பநாதன் சிறந்த குரல் வளத்தையும் நடிப்பையும் வெளிப்படுத்தினார்.

நாடக அங்கம் மெருகேற்றப்பட்டிருந்தால் நிகழ்ச்சி முழுமையான அனுபவமாக அமைந்திருக்கும்.

காற்றினிலே வரும் கீதம்

‘திரீ என்டர்டெய்ன்ஸ் (இந்தியா)’ குழு மேடையேற்றிய நாடகம் பிஜிபி அரங்கில் ஆகஸ்ட் 28ஆம் தேதி பார்வையாளர்களை இசை மழையில் ஆழ்த்தியது.

நாடகம் இரண்டரை மணி நேரம் இடைவேளையின்றி நீடித்திருந்தாலும் சலிப்புத் தட்டாமல் சுவாரசியமாக நகர்ந்தது.

மதுரையில் பிறந்து, அவரது குலத்தால் பாடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு, அப்போக்கை மாற்றி, பெண் பாடகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து, ஒரு நேர்காணலின்போது அவரது கணவரைச் சந்தித்து, பின்பு திரைப்படங்களில் பாடிக்கொண்டே நடிக்கும் முன்னணி நடிகராக வலம் வந்து, இறுதியில் தமது கொடைக் குணத்தால் வறுமையில் வாடிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் முக்கிய வாழ்க்கை நினைவுகளையும் கட்டங்களையும் நாடகம் சிறப்பாகப் படைத்திருந்தது.

நாடகத்தின் இசை வடிவமைப்பு, ஒளி வடிவமைப்பு, நடிப்பு ஆகிய அனைத்து அம்சங்களும் நாடகத்திற்கு வலுசேர்த்தன.

குறிப்பாக, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து நாடகத்தை இயக்கிய லாவண்யா வேணுகோபாலின் நடிப்பு மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்த பாஸ்கரும் சிறப்பாக நடித்திருந்தார்.

ஹூஸ் சாரி நவ்?

ஐந்து கதாபாத்திரங்கள், ஒரே நடிகர், புடவை என்ற ஒற்றைக் கருப்பொருளைக் கொண்டு ரசிகர்களை ஆழ்ந்து சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது ரசா நாடகக்குழுவின் (இங்கிலாந்து) ‘ஹூஸ் சாரி நவ்’.

அகம் நாடகக் குழுவின் ‘பிளேக் பாக்ஸ்’ அரங்கில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் இந்த ஒன்றரை மணி நேர நாடகம் மேடையேற்றப்பட்டது.

மலேசியாவில் பிறந்து வளர்ந்த இலங்கைத் தமிழ் நடிகையும் எழுத்தாளருமான ராணி மூர்த்தி எழுதி நடித்த இந்நாடகம் பெண்ணியத்தை அழகாக வெளிப்படுத்தியது.

‘புடவை’ என்ற ஒற்றை ஆடையை ஓர் அடையாளமாகவும் உருவகமாகவும் கொண்டு, மனித வாழ்க்கை, நினைவுகள், பாலினம், புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் சிக்கல்கள் ஆகியவற்றை இந்த நாடகம் விவரித்தது.

மேடையில் வயதான புலம்பெயர்ந்த ஆசியப் பெண், திருநங்கை, மலேசியாவில் வாழும் அருங்காட்சியக ஊழியர், போர்ச் சூழலில் இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் தாய், பாராம்பரிய நெசவாளர் ஆகிய ஐந்து கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, புடவைக்கும் அவர்களின் வாழ்விற்கும் உள்ள பிணைப்பை ராணி மூர்த்தி உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினார்.

அவரது நடிப்பு மனத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய அதே வேளையில், நாடகத்தின் நடுவே அவர் பார்வையாளர்களுடன் நகைச்சுவையாகக் கலந்துரையாடியது பலரையும் சிரிக்க வைத்தது.

நகைச்சுவையை நேர்த்தியாகவும் பக்குவமாகவும் கையாண்ட பாணி பாராட்டத்தக்கது.

சிங்கப்பூரின் கலாசாரப் பதக்க விருது பெற்ற பிரபல நாடக ஆசிரியர் ஹரேஷ் சர்மா எழுதிய ‘லிசர்ட்’ நாடகத்தின் தமிழ் வடிவமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி சலீம் ஹாடியின் இயக்கத்தில் ‘பல்லி’ மேடையேறியது.

ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் உளவியல் சார்ந்த, நகைச்சுவையும் துயரமும் கலந்த நாடகமான ‘பல்லி’, ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வீட்டிற்குள் நிகழ்கிறது.

தாய், மகன், பணிப்பெண் என்ற மூன்று கதாபாத்திரங்களைக் கொண்ட இல்லம் வெளிப்பார்வைக்கு மாலை நேரங்களில் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் ஒரு ‘சீரான குடும்பமாக’ தோன்றுகிறது. ஆனால், அவர்களின் புன்னகைகளுக்குப் பின்னால் பேதிர்ச்சிகளும் வெறுப்பும் மறைந்துள்ளன.

நாடகத்தின் கதைக்களம் களிநயமானதாக இருந்தாலும், படைக்கப்பட்ட விதம் சற்று மாறுபட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

270 டிகிரி பரிமாணத்தில் அமைந்துள்ள ஆர்ட்ஸ் ஹவுஸ் பிளே டென் அரங்கிற்கு நடிகர்களின் மேடை இயக்கம் சற்றுப் பொருந்தாமல் போனது.

பணிப்பெண்ணாக ஷீனா கிரேசின் நடிப்பு தனித்து நின்றது. அம்மாவாக பூஜா புண்ணியமூர்த்தி மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். மகனாக நடித்த அன்பு நவீன் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிக்கொணர பெரிதும் முயன்றார்.

தெருக்கூத்து 101

ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆர்ட்ஸ் ஹவுசில் நடந்த பயிலரங்கை இந்தியாவிலிருந்து வந்திருந்த தெருக்கூத்துப் பட்டயக் கல்வியாளர் தமிழரசி வழிநடத்தினார்.

முறையாக அக்கலை வடிவைக் கற்க பல மாதங்களிலிருந்து ஆண்டுகள்வரைகூட எடுக்கலாமென கூறிய அவர், அதன் அடிப்படை திறன்களை மட்டும் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அரை துள்ளல், முழு துள்ளல், கிரிக்கி ஆகிய மூன்று முக்கிய நகர்வு வித்தைகளை அவர் கற்பித்து அனைவரையும் அதை முயற்சி செய்ய வைத்தார்.

பங்கேற்பாளர்களின் கவனத்தைக் கூர்மையாக்க சில விளையாட்டுகளும் விளையாடப்பட்டன .

தெருக்கூத்தின் வரலாற்றையும் அதன் பரிணாமத்தையும் விளக்கும் திரைவில்லைப் படைப்பு ஒன்றையும் அவர் படைத்தார். அதனைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் தெருக்கூத்திற்கான ஒப்பனைகளையும் ஆடைகளையும் அணிந்து தெருக்கூத்துக் கலைஞர்களாக மாறும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விண்மீன்கள்

மாணவர்கள் எவ்வாறு தங்கள் உடல்களைக் கட்டுப்படுத்தலாம், எவ்வாறு நடிக்கலாம், தன்னம்பிக்கையுடன் பேசலாம் எனப் பல திறன்கள் கற்பிக்கப்பட்டன.

துடிப்பான விளையாட்டுகளுடன் மாணவர்களின் கவன நேரத்தைக் கருத்தில்கொண்டு பயிலரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

பயிலரங்கில் கலந்துகொண்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலரங்கின் முடிவில் ஒரு சிறிய நாடகத்தை மேடையேற்றினர்.

தி ஆர்ட் ஆஃப் மைக்ரோ டிராமா

குறுநாடகங்களை எழுத டம்மீஸ் டிராமா குழுவைச் சேர்ந்த ஸ்ரீவத்சன், ஆர்ட்ஸ் ஹவுஸ் வளாகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பங்கேற்பாளர்களுக்குக் கற்பித்தார்.

மனித உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு கதை எழுதுவது, சுற்றியுள்ள மக்களின் தன்மைகளைக் கதாபாத்திரங்களில் பொருத்துவது, குறைந்த நேரத்தில் பெரிய கருத்துகளைக் கூறுவது போன்ற பல்வேறு முக்கியத் திறன்களை அவர் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

கதையில் நாடகத்தன்மை, நகைச்சுவை, பதற்றம் என அனைத்தும் இருப்பதன் அவசியத்தையும் அவற்றை எவ்வாறு எழுத்தில் கொண்டுவருவது என்பதையும் அவர் கற்பித்தார்.

வசனங்கள் எழுதுவது, எளிமையான ஒளி, ஒலி வடிவமைப்பின்வழி கருத்துகளைக் கடத்துவது, பார்வையாளர்களின் கற்பனையைப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றையும் அவர் பயிலரங்கில் குறிப்பிட்டார்.

பயிலரங்கின் இறுதியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு சிறுகதையை எழுதியிருந்தனர்.

சூரரைப் போற்று, கல்கி 2898 ஏடி திரைப்படங்கள் புகழ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தேறிய ‘கிலவ்னிங்’ பயிலரங்கு பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கியது.

லிட்டில் தியேட்டர் நாடகக்குழு ஆர்ட்ஸ் ஹவுசில் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடத்திய பயிலரங்கின் பயிற்றுவிப்பாளர்களில் சார்பட்டா பரம்பரை, மதராஸி திரைப்படங்கள் புகழ் ஷபீர் கள்ளரக்களும் ஒருவர்.

வசனமேதுமின்றி உடல் அசைவுகள் வாயிலாகவும், சத்தங்கள், நகைச்சுவையான நடவடிக்கைகள் வாயிலாகவும் நடிப்பை வெளிப்படுத்தும் திறனைப் பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்பாளர்களுக்குக் கற்பித்தனர்.

நடிகர்கள் மட்டுமன்றி பலருக்கும் மேடையில் நிற்கும்போது இருக்கும் அச்சத்தையும் தயக்கத்தையும் கடந்து எவ்வாறு கவலையின்றி, மகிழ்ச்சியாக நடிக்கலாம் என்பதைப் பயிலரங்கு கற்பித்தது.

கிலவ்னிங் படைப்புகள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவும் நோக்குடன் அதிகம் செய்யப்படுவதாக பயிற்றுவிப்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அவ்வாறு மருத்துவமனைகளில் படைப்புகளைச் செய்யும்போது கருத்தில் கொள்ளவேண்டியவை, எவ்வாறு பாதுகாப்பாக படைக்க வேண்டுமென்றும் கற்பிக்கப்பட்டன.

இப்பயிலரங்குக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி தி லிட்டில் தியேட்டர் குழு விவா- பல்கலைக்கழக சிறார் புற்றுநோய் நிலையத்திலிருந்த சிறுவர்களுக்காகவும் மருத்துவ ஊழியர்களுக்காகவும் கிலவ்னிங் படைப்பு ஒன்றைப் படைத்தது.

நடிப்பு பயிலரங்கு

லிட்டில் தியேட்டர் குழு ஆர்ட்ஸ் ஹவுசில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடத்திய நடிப்பு பட்டறையைக் கிருஷ்ணாகுமார் வழிநடத்தினார்.

பங்கேற்பாளர்களுக்குத் துடிப்பூட்ட சில விளையாட்டுகளுடன் தொடங்கிய பயிலரங்கு முக்கிய நடிப்பு உத்தி பயிற்சிகளுடன் முடிவடைந்தது.

மனிதர்கள் வெவ்வேறு உணர்ச்சிகளை உணரும் வேளையில் முக்கியமாக மாறுவது நமது மூச்சு என்பதை உணர்த்திய கிருஷ்ணகுமார், மூச்சு பயிற்சிகளைப் பயன்படுத்தி எவ்வாறு எளிதாக பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம் என்பதைக் கற்பித்தார்.

மூச்சின் வழி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் சோகத்தை வெளிப்படுத்தி கண்ணீர் வரவழைக்கவும் அவர் வழிகளைக் கற்பித்தார்.

மேலும், மேடையில் தன்னம்பிக்கையுடன் நிற்பது, நடிப்பது போன்றவையும் பயிலரங்கில் கற்பிக்கப்பட்டன.

நாடகவாதி கருத்தரங்கு

ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி ‘நாடகவாதி’ கருத்தரங்கு ‘லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்’ என்ற தலைப்புடன் நடந்தேறியது.

மொழி, அடையாளம், பல கலாசாரங்களைக் கொண்ட சிங்கப்பூரில் மேடை நாடகத்துறையின் எதிர்காலம் ஆகிய கருப்பொருள்கள் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டன.

கருத்தரங்கில் எழுத்தாளர், நடிகர், இயக்குநர் கார்த்திகேயன் சோமசுந்தரம், நாடக கலைஞர் கிரேஸ் கலைச்செல்வி, கலாசாரப் பதக்கம் பெற்ற டிராமா பாக்ஸ் குழு நிறுவனர் கோக் ஹேங் லியுன், பலக்கலை கலைஞர் நூர் எஃபண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வருகை ஆய்வாளர் டாக்டர் வித்யா சுப்பிரமணியம் கருத்தரங்கை வழிநடத்தினார்.

சிங்கப்பூர் நாடகத்துறையில் பெண்களின் பங்கு குறைவாகப் பதிவாகியுள்ளது, பல கலாசாரங்களை தனித்தனியாகப் படைப்பதற்கும் இணைத்துப் படைப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் ஆகிய கூறுகள் பார்வையாளர்களுடனான கேள்வி-பதில் அங்கத்தில் இடம்பெற்றன.

சிங்கப்பூரின் முதல் அனைத்துலக தமிழ் நாடக விழாவாக நடந்தேறிய ‘நாடகமிக்’ வெவ்வேறு வகையான நாடகங்களையும் பயிலரங்குகளையும் படைத்தது.

அனைவருக்கும் ஏதேனும் ஒரு அம்சமாவது பிடித்து அதில் அவர்கள் பார்வையாளர்களாகவோ பங்கேற்பாளர்களாகவோ கலந்துகொள்ள முன்வர வேண்டுமென்றே விழா அவ்வாறு வடிவமைக்கப்பட்டதாக அகம் நாடகக் குழு தெரிவித்தது.