கோவில்களை மீண்டும் கட்டுவதற்கு முன், நாம் மக்களைக் கட்டியெழுப்ப வேண்டும்
கோவில்களை மீண்டும் கட்டுவதற்கு முன், நாம் மக்களைக் கட்டியெழுப்ப வேண்டும்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 10 அன்று மேற்கு கொலம்பியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பொகோட்டாவின் பேராயரும் கொலம்பியாவின் முதன்மை ஆயருமான கர்தினால் லூயிஸ் ஜோஸ் ரூடா அபரிசியோ அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு “ஆன்மீக முதலுதவி” வழங்குவதற்காக ஐந்து ஆயர்கள் மற்றும் 80 அருள்பணியாளர்கள் அடங்கிய குழுவை வழிநடத்தி வருகிறார்.
பதினைந்து மறைமாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின, அத்துடன் ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.
புவெனவென்ச்சுராவில், ஏற்கனவே நிலவி வந்த வறுமை, புறக்கணிப்பு, வன்முறை மற்றும் இடம்பெயர்வு போன்ற பிரச்சனைகளை இந்த நிலநடுக்கம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
உள்ளூர் மக்களின் வியக்கத்தக்க ஒற்றுமை உணர்வையும், குறிப்பாக உணவு வழங்கி, முதியவர்களைப் பராமரித்து, குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் பெண்களின் பங்களிப்பையும் கர்தினால் ரூடா அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மகிழ்ச்சியாலும், தங்கள் மக்களுடனேயே தொடர்ந்து தங்கியிருந்த அருள்பணியாளர்களின் நெருக்கத்தாலும் அவர் நெகிழ்ச்சியடைந்தார்.
ஆலயங்கள் நம்பிக்கை மற்றும் சமூகத்தின் முக்கியமான அடையாளங்கள் என்பதை வலியுறுத்திய கர்தினால், "ஆலயங்களைக் கட்டுவதற்கு முன்பு, நாம் மக்களைக் கட்டியெழுப்ப வேண்டும்" என்று குறிப்பிட்டார். நம்பிக்கையை மீட்டெடுப்பதும்,
துயருறும் குடும்பங்களோடு துணை நிற்பதும், உணர்வுப்பூர்வமான, உளவியல் மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குவதுமே திருஅவையின் முதல் முன்னுரிமையாகும்.
இந்த இக்கட்டான காலத்தில் நல்ல சமாரியனின் வழிகாட்டுதலால் ஈர்க்கப்பட்ட ஆயர்களும் அருள்பணியாளர்களும், தங்கள் பயணத்தை "நிறுத்தி", துன்பப்படுபவர்களுடன் உடனிருக்க முடிவு செய்துள்ளனர். ஆலயங்கள் இடிந்து போயிருந்தாலும் கூட, மக்கள் கூடாரங்களின் கீழ் நற்கருணை வழிபாட்டைத் தொடர்ந்து நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.