இடைத்தேர்தல்கள் ரவுண்டப்: மிரளவைத்த எம்.ஜி.ஆர்
இடைத்தேர்தல்கள் ரவுண்டப்: மிரளவைத்த எம்.ஜி.ஆர் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
மதுராந்தகம்... தாராபுரம்... இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி ஆர்வத்துடன் தமிழகம் காத்திருக்கிறது. இந்தத் தேர்தல்களைக் காட்டிலும், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் காலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் வேறு வகைகளில் பரபரப்பும் விறுவிறுப்பும் மிக்கவையாக இருந்தன.
ஐந்து முனைப் போட்டி என்றாலும், களத்தின் மையத்தில் நிற்பது மூன்று கட்சிகள்தான் — த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.
த.வெ.க-வுக்கு இது வெறும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அல்ல. இரண்டு இடங்களிலும் வென்றால், அது சட்டமன்ற எண்ணிக்கையில் கிடைக்கும் இரண்டு கூடுதல் எண்கள் மட்டுமல்ல; தங்களை ஆட்சி செய்ய மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அரசியல் சான்றிதழாகவும் பார்க்கப்படும்.
அதனால்தான், பொதுத்தேர்தலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தீவிரப் பிரசாரம் செய்த விஜய், இந்த இடைத்தேர்தல்களில் வீதி வீதியாகச் சென்று, பல மணி நேரம் மக்களைச் சந்தித்தார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தத் தேர்தல் முக்கியமான சோதனை. தன்னுடைய தலைமையை அவர் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று ‘த.வெ.க-வால் கரைக்க முடியாத இரும்பு அ.தி.மு.க’ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.
த.வெ.க-வை மையமாக வைத்து தி.மு.க தனது அரசியல் எதிர்காலத்தை மறுசீரமைத்துக்கொண்டிருக்கும் நிலையில், “த.வெ.க-வுக்கு தி.மு.க-தான் இன்னும் வலிமையான எதிர்க்கட்சி” என்ற செய்தியைச் சொல்ல வேண்டிய அரசியல் தேவை மு.க. ஸ்டாலினுக்கு இருக்கிறது.
அப்படிப் பார்த்தால், மதுராந்தகம்–தாராபுரம் தேர்தல்கள் வெறும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்கள் அல்ல. இது ஆளுங்கட்சிக்கான தேர்வு... எதிர்க்கட்சிக்கான தேர்வு. அதைவிட முக்கியமாக, தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை யார் தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதற்கான ஒரு சிறிய முன்னோட்டம் இது!
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்கள் பல நேரங்களில் ஒரு தொகுதியின் காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலாக மட்டுமே இருக்கவில்லை. ஆட்சியின் மீதான மக்களின் மனநிலையை அளக்கும் ‘மினி ரெஃபரெண்டம்’ போல இருந்திருக்கின்றன.
காமராஜருக்கு ‘தி.மு.க-வின் பிரதான எதிரி நான்தான்’ என்பதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கருணாநிதிக்கு - எம்.ஜி.ஆர் வெளியேறியதால் தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதைக் காட்ட வேண்டிய அவசியம். எம்.ஜி.ஆருக்கோ, ஒரே கேள்வி — ‘நான் தான் தமிழகத்தின் புதிய அரசியல் நம்பிக்கை’ என்பதை மக்களிடம் நிரூபிக்க வேண்டும்.
மூன்று தலைவர்களின் அரசியல் எதிர்காலமும் ஒரே தொகுதியில் சோதிக்கப்பட்டது!
திண்டுக்கல் இடைத்தேர்தலில், ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தனை காமராஜர் களமிறக்கினார். தி.மு.க சார்பில் பொன். முத்துராமலிங்கம் போட்டியிட்டார். அ.தி.மு.க சார்பில் அதுவரை பெரிதாக அறியப்படாத வழக்கறிஞர் மாயத்தேவரை எம்.ஜி.ஆர் நிறுத்தினார்.
இடதுசாரிகளின் நிலைப்பாடு அப்போது சுவாரஸ்யமாக இருந்தது. தி.மு.க பிளவு என்பது கொள்கைப் பிளவு அல்ல; கருணாநிதி–எம்.ஜி.ஆர் தனிப்பட்ட மோதலின் விளைவு என்ற பார்வை அவர்களிடம் இருந்தது. சி.பி.எம் சார்பில் என்.சங்கரய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், வேட்புமனுத் தாக்கல் முடிந்த மறுநாளே எம்.ஜி.ஆர், சி.பி.எம் தலைவர் பி.ராமமூர்த்தியைச் சந்தித்தார்.
அதற்குப் பிறகு அரசியல் களம் மாறியது. வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளில் என்.சங்கரய்யா போட்டியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதைக் கண்ட கருணாநிதி தனது முதல் வேலை சி.பி.எம்-ஐ அழிப்பதுதான் என்று கொந்தளித்தார்.
காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர் — மூவருமே திண்டுக்கல்லில் முகாமிட்டு பம்பரமாகச் சுற்றினர். ஆனால், முடிவு வெளியானபோது அரசியல் கணக்குகள் அனைத்தும் தலைகீழானது.
அ.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். காமராஜரின் வேட்பாளருக்கு இரண்டாவது இடம். தி.மு.க வேட்பாளருக்கு மூன்றாவது இடம். இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் வைப்புத்தொகையையே இழந்தார். புதிய கட்சியாக இருந்த அ.தி.மு.க-வுக்கு அது மிகப்பெரிய அரசியல் வெற்றி. தி.மு.க-வுக்கு மிகப்பெரிய அரசியல் சறுக்கல்.
உடனே எம்.ஜி.ஆர் சட்டமன்றப் பொதுத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். மக்கள் நம்பிக்கையை தி.மு.க இழந்துவிட்டது என்றார். ஆனால், கருணாநிதியும் சும்மா இருக்கவில்லை. ஒரு இடைத்தேர்தல் முடிவை வைத்து ஒட்டுமொத்த ஆட்சியையும் மதிப்பிட முடியுமா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். ஒரு தொகுதியில் நடந்த தேர்தல்... தமிழக அரசியலின் மையத்தையே அப்போது அசைத்தது.
அதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே திருச்செங்கோடு இடைத்தேர்தல் தமிழக அரசியலில் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. 1962 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி. சுப்பராயன், தி.மு.க-வின் செ.கந்தப்பனை சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
ஆனால், சுப்பராயன் மகாராஷ்டிர ஆளுநராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வந்தது. அப்போது அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் சிறையிலிருந்தனர். இருந்தாலும் கந்தப்பன் வேட்பாளராகக் களத்தில் குதித்தார்.
காங்கிரஸை 720 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க-வின் கந்தப்பன் வீழ்த்தினார். அது, காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியில் பரபரப்பு உண்டாக்கியது.
பிரதமர் ஜவஹர்லால் நேருவே காமராஜருக்குக் கடிதம் எழுதினார். இடைத்தேர்தல் ஒரு “சிறிய அதிர்ச்சியை” தந்துள்ளதாகவும், தி.மு.க தனது பலத்தை மெல்ல அதிகரித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். ஒரு இடைத்தேர்தல்... டெல்லியின் கவனத்தைத் தமிழகத்தின் மீது திருப்பியது!
இடைத்தேர்தல்களின் அரசியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள காமராஜரின் அரசியல் பயணமே போதும்.
ராஜாஜிக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற காமராஜர், அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். சட்டமன்றத்துக்குள் வர வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, குடியாத்தம் தொகுதியில் ஏற்பட்ட காலியிடத்தில் போட்டியிட முடிவு செய்தார்.
அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் கோதண்டராமன் போட்டியிட்டார். பெரியாரும் அண்ணாவும் காமராஜரை ஆதரித்தனர். அரசியல் கணக்கு தெளிவாக இருந்தது — காமராஜர் தோற்றால் ராஜாஜி மீண்டும் வரக்கூடும் என்ற அச்சம் திராவிட இயக்கத்தினரிடம் இருந்தது.
காமராஜர் வெற்றி பெறுவதற்காகத் தொகுதியைச் சுற்றிய விதமும் வரலாற்றில் பதிவானது. வாக்குப்பதிவுக்கு சில வாரங்களுக்கு முன்பே குடியாத்தம் தொகுதியிலிருந்த 160 கிராமங்களில் 100 கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்திருந்தார்.
38,000 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றிபெற்றார். அதே கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பெருந்தலைவர்... பெருந்தலைவர்தான்!
1968 டிசம்பர் 1.
‘மார்ஷல்’ ஏ.நேசமணி மறைவால் ஏற்பட்ட இடைத்தேர்தல். தி.மு.க தனது கூட்டணிக் கட்சியான சுதந்திரா கட்சியின் வேட்பாளர் மத்தயசுக்கு ஆதரவாகத் தீவிரமாகக் களமிறங்கியது.
அண்ணா மட்டும் காமராஜருக்கு எதிராக நேரடியாகப் பிரசாரத்துக்குச் செல்ல மறுத்தார். அவரது பேச்சு ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு மத்தயசுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டது.
களம் அனல் பறந்தது. வன்முறையும் கொலையும் நிகழ்ந்தன. ஆனால் இறுதியில்? காமராஜர் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ஒரே அரசியல் தலைவர், இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் இரண்டு இடைத்தேர்தல்களைச் சந்தித்த அரிய நிகழ்வு அது.
பின்னாளில் ஜெயலலிதாவும் ஆண்டிப்பட்டி, ஆர்.கே.நகர் என இரண்டு இடைத்தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், அதன் அரசியல் சூழலும் காரணங்களும் வேறு. இடைத்தேர்தல் என்பது சில நேரங்களில் ஒரு தலைவரின் அரசியல் வாழ்க்கைக்குக் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பாகவும் மாறியிருக்கிறது.
அண்ணாவுக்கும் அப்படியொரு தருணம் கிடைத்தது. 1967 மார்ச்சில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதே ஆண்டு ஆகஸ்டில், அண்ணா விட்டுச் சென்ற தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல். தி.மு.க சார்பில் முரசொலி மாறன் களமிறங்கினார்.
ஆனால், தேர்தலுக்கு முன்பு அண்ணா அளித்திருந்த ஒரு முக்கியமான வாக்குறுதி எதிர்க்கட்சியின் கையில் சிக்கியிருந்தது.
“ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி!”
அதை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை. காங்கிரஸ் கேலி செய்தது: “பானை இங்கே... படியரிசி எங்கே?” திமுக தந்ததும் “பாதி பொய், மீதி நொய்” என்றது.
அண்ணா பதிலடி கொடுத்தார்.
“குறைந்தது அந்த நொய்யையாவது நாங்கள் கொடுத்திருக்கிறோம்!”
அதோடு நிற்கவில்லை. பெண்களின் கூட்டத்தைச் சுட்டிக்காட்டி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். முடிவில் முரசொலி மாறன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே எதிர்கொண்ட இடைத்தேர்தலை, ஆட்சிக்கு எதிரான தீர்ப்பாக மாறவிடாமல், தன் ஆட்சிக்கு ஆதரவான அரசியல் செய்தியாக தி.மு.க மாற்றிக்கொண்டது. இதுதான் இடைத்தேர்தல்களின் அரசியல்!
சட்டரீதியாகப் பார்த்தால் இடைத்தேர்தல் என்பது ஒரு தொகுதிக்கான தேர்தல். ஆனால், அரசியல் ரீதியாக?
அது ஒருபோதும் ஒரு தொகுதிக்கான தேர்தல் மட்டுமல்ல. குடியாத்தத்தில் காமராஜரின் அரசியல் எதிர்காலம் சோதிக்கப்பட்டது. திருச்செங்கோட்டில் தி.மு.க-வின் வளர்ச்சி டெல்லியின் கவனத்தை ஈர்த்தது. திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் தனது புதிய அரசியல் சக்தியை நிரூபித்தார். நாகர்கோவிலில் தோல்விக்குப் பிறகு காமராஜர் மீண்டும் மக்களிடம் தனது செல்வாக்கை நிரூபித்தார். தென் சென்னையில் அண்ணாவின் ஆட்சிக்கு மக்கள் அளித்த முதல் முக்கியமான அரசியல் சைகை கிடைத்தது.
ஓர் இடைத்தேர்தல்...
ஒரு தொகுதியை வெல்வதற்கான போராட்டமாகத் தொடங்கி, ஒரு ஆட்சியின் மீதான தீர்ப்பாக மாறலாம். ஒரு தலைவரின் செல்வாக்கை அளக்கலாம். ஒரு கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கலாம். புதிய அரசியல் சக்தியின் வருகையை உறுதிப்படுத்தலாம். அல்லது, ஏற்கெனவே ஆட்சியில் இருப்பவர்களுக்கு, “மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்” என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்பையும் தரலாம்.
அதனால்தான்...
மதுராந்தகமும் தாராபுரமும் வெறும் இரண்டே இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாக மட்டுமே தெரியவில்லை. தமிழகத்தின் அடுத்த அரசியல் அத்தியாயத்தை எழுதப்போகும் இரண்டு சிறிய பரீட்சைக் களங்களாகவே தெரிகின்றன.
யார் வென்றாலும் சரி... யார் தோற்றாலும் சரி...
இந்த இரண்டு தொகுதிகளில் பதிவாகும் தீர்ப்பின் அரசியல் எதிரொலி, அந்த இரண்டு தொகுதிகளின் எல்லையைத் தாண்டி மாநிலம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது!