📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 15, 2026 02:31 AM

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்?

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் தனித்து களம் காண்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன.

இந்நிலையில் தங்களின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்;

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத் தேர்தலில் இடது சாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். த.வெ.க. அரசுக்கு ஆதரவு நிலை நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஏழை மக்கள், தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட வேண்டும்.

அதற்காக வெளியில் இருந்து ஆதரவு தருகின்றோம். மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ள அரசு என்னென்ன வாக்குறுதிகளை தருவதாக கூறியிருந்ததோ, அதனை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் இணைந்து செயல்படுவதை நாங்கள் ஏற்கவில்லை.

தவறான முன்னுதாரணம்

அ.தி.மு.க.வில் வெற்றி பெற்றவர்கள் ராஜிநாமா செய்து விட்டு த.வெ.க வில் இணைந்தது தவறு என்பதை நாங்கள் ஏற்கனவே கண்டித்து இருக்கிறோம். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

அதனால் ஏற்பட்டுள்ள அந்த காலி இடத்திற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் த.வெ.க.வை ஆதரித்தால் தவறான முன் உதாரணமாக மாறிவிடும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் தனித்துப் போட்டியிடு கின்றோம்.

இடைத்தேர்தல் பிரசாரத்தை, அரசியல் பிரசார களமாக பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

மக்கள் குரல்

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை இந்த அரசு செயல்படுத்த வேண்டும், தமிழ்நாடு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்வது போன்றவை இந்த தேர்தல் பிரசாரத்தின் மையமாக அமையும்.

மக்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவு குரலாக எங்கள் பிரச்சார வியூகம் இருக்கும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மட்டுமல்ல. நல்ல விஷயங்களை எடுத்து சொல்வோம்.

த.வெ.க. அரசு தவறான முடிவுகளை எடுத்தால் அதனை கண்டிப்போம். பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து, பெண்களுக்கு எதிரான இழிவான கருத்துக்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது போன்ற நல்ல விஷயங்களை வரவேற்கின்றோம்.

இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நடை பெறுகிறது. அதில் எங்கள் இரு கட்சிகளின் வேட்பாளர்களை அறிவிப்போம். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகளை தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.